செவ்வாய், பிப்ரவரி 09, 2010

உள்நாட்டுப்போர் கேட்பது உங்களுக்குள் இருப்பது போராளியா? (அ) கைக்கூலியா?

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் சத்தமின்றி துவக்கப்பட்டிருக்கும்போதும் அதற்கு விண்ணை பிளக்கும் பதிலடியாய் மக்களும் மாவோயிஸ்டுகளும் இறங்கியிருக்கிற களம் பற்றி அறியவேண்டியதன் அவசியம் நாளும் கூடிக்கொண்டே வருகிறது. மத்திய உள்துறை அமைச்சரும், கார்ப்பரேட் கம்பெனிகளின் மாமாவுமான .சிதம்பரம் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக, அந்நிய முதலீடுகளுக்கு இடையூறாக உள்ள மாவோயிஸ்டு, நக்சலைட்டுகளை அழிக்கவே இந்த காட்டுவேட்டை எனப்படும் Operation Green Hunt ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்கிறார். நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கும், பழங்குடியின மக்களின் நலத்திட்டங்களுக்கும் தடையாய் இருப்பதாக மிகவும் கவலை தெரிவிக்கிறார். "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை தான்". இந்த ஓநாய் அழுவது கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகளுக்காக, அவர்கள் தரும் பணத்திற்காக. கல்வி, மருத்துவம், சுகாதாரம், பொதுத்துறை,குடிநீர்,சாலைகள் என எல்லாம் தனியார்மயம். கட்டுக்கடங்காத விலைவாசி, உத்தரவாதமில்லாத வேலையும் அதன் கூலியும் என எதைப்பற்றியும் அரசுக்கு கவலையோ, அக்கறையோ சிறிதும் இல்லை. இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது தீவிரவாதம், பயங்கரவாதம்னு மக்களின் தார்மீக எழுச்சியை வேறு வழியில் திசை மாற்றும் வேலையே அரசின், அதிகாரவர்க்கத்தின், முதலாளிகளின் போக்காய் இருக்கிறது. சமூகத்தில் இம்மாதிரி ஒரு அடிப்படை வசதியோ, கேடுகெட்ட அரசோ இருப்பது ஏதும் அறியாமல் போலி சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேல் வாழும் அம்மக்களுக்கு திடீர் நலத்திட்டம் போட்ட மர்மமென்ன? ஒரு வேளை ஞாபகம் வந்து நல்லது செய்ய வந்திருப்பாங்கன்னு யாரும் நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல. வந்தது எட்டப்பனின் வாரிசுகள், தங்கள் முப்பாட்டனின் செயல்வழியிலேயே மீண்டும் புதிய பல ஒப்பந்தங்களோடு தனியார்மயம் எனும் சிறப்பு பொருளாதார கொள்கை அடிப்படையில் தாய்நாட்டை கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். வீடுகள், விளைநிலங்கள் என ஆரம்பித்து ஆறுகள், மலைகள், காடுகள், கடல்களென பல லட்சம் கோடி டாலர் மதிப்பிலான இந்நாட்டின் வளங்களை பாதுகாப்போடு திருடிக்கொண்டு போக சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படுவதே இந்தப்போர். இதை எதிர்ப்பவர்கள் யாராயினும் அவர்களை நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த இந்த அரசும், நம் வரிப்பணத்தில் வருமானம் பெறும் காவல்துறையும், இராணுவமும் சேர்ந்து மாவோயிஸ்டு என்றும், தீவிரவாதி என்றும் முத்திரை குத்துவதோடு சித்ரவதை செய்யும், தேவைப்பட்டால் கொலையும் செய்யும். இலங்கையில் போராடிய விடுதலைப்புலிகளின் பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது போலவே இங்கும் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகளின் பெயரால் பழங்குடியின மக்களும் சித்ரவதையோ, கொலையோ செய்யப்படுவார்கள். இதற்காக BSF, CRPF, JMF எனப் பல்வேறு அரசபடைகளோடு சல்வாஜூடும் என்கிற மக்கள் கூலிப்படையும் இறக்கிவிடப்பட்டுள்ளது.

அவர்கள் மாவோயிஸ்டுகளின் பெயரால் 2 வயது குழந்தையின் கைவிரல்களை வெட்டியிருக்கிறார்கள். பெண்களை வண்புணர்ச்சிக்குள்ளாக்கியது, அவர்களை ஊனமாக்கியது, ஆண்களை சித்ரவதை செய்வது, கொல்வது என தங்களது ராஜகத்தை கேள்வி கேட்பாரின்றி அரங்கேற்றி வருகிறார்கள். பல லட்சம் கோடி மதிப்பிலான இந்த மக்கள் வாழும் மலையை பங்குபோட்டுக்கொள்ள பிணந்திண்ணி கழுகுகளாய் வந்துள்ள தரகு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து ஓட்டுப்பொறுக்கிகள், அதிகாரிகள் என தொடர்ந்து ரூ.2000 சம்பளத்திற்காக கைகூலிகளாய் போன துரோகிகள் வரை கூட்டிணைவாய் அம்மக்களை கொன்றாவது வளங்களை கொள்ளையிட வேண்டுமென்பதில் குறியாய் உள்ளன. இந்த படைகள் இதுவரை 700 கிராமங்களை எரித்து, 30 ஆயிரம் மக்களை முகாம்களிலும், 3 லட்சம் மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்தும் துரத்தியிருக்கிறார்கள். இத்தனை மக்களையும் துரத்தியபின் அரசு எந்த மக்களுக்காக செய்யும் நலத்திட்டங்களுக்கு மாவோயிஸ்டுகள் தடையாய் இருக்கிறார்கள் என்று உங்களுக்குள் கேள்வி எழும். சந்தேகமின்றி அது பன்னாட்டு முதலாளிகளும் (Vedhantha, Essar, Bosco, Riodindo, etc..), தரகு முதலாளிகளும் (Tata, Birla, Reliance, Mittal, etc..), திருடி அடிக்கத்துடிக்கும் கொள்ளை லாபத்துக்குத்தான் போராடுபவர்களையும், போராளிகளையும் தீவிரவாதி என்கிறார்கள். எனவே தீவிரவாதி, பயங்கரவாதி என்று ஊடகம், தினசரிகளில் வரும் பொதுக்கருத்துக்கு ஆளாகி வீழ்ந்து விடாதீர்கள். நம் வரிப்பணமும் நமக்கான நலத்திட்டங்களுக்கு இல்லை, நம் வளங்களும் நம்முடைய நலன்களுக்காக இல்லை. நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த இந்த மத்திய, மாநில ஓட்டுப்பொறுக்கிகள், அதிகாரிகள், நீதிமன்றம், ஊடகம் னைவரும் கூட்டுக் களவானிகளாக இந்த நாட்டின் மனித வளம், மண் வளம் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுத்து கொத்தடிமைகளாய் மாற்றி ஈவிரக்கமின்றி சுரண்டி அவர்கள் லாபம் பார்க்கவே ஒவ்வொரு பன்னாட்டு கம்பெனியும் வரவழைக்கப்படுகிறது (MNC) . இந்த அரசால் இனி எதையும் காப்பாற்ற முடியாது. நம் மக்களையோ, வளத்தையோ ஒப்பந்தத்தின் பெயரால் எழுதிக் கொடுப்பதைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு அமெரிக்காவால் கட்டளையிடப்படவில்லை. அனைத்தையும் எழுதிக்கொடுக்கும் வரை இலவச கலர் T.V., 1ரூ அரிசி எதையாவது கணக்கு காட்டிகினு இருப்பாங்க. கடைசியில் ஒரு வழியும் இல்லையென கைவிரித்துவிடும் வரை நமக்கு தன்மானமோ, சுய அறிவோ இல்லையெனில் நம்மை காப்பாற்ற போவது யாரும் இல்லை.

சமீபத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளின் மாமா .சிதம்பரம் டெல்லிக்கு போக சென்னை விமான நிலையத்துக்கு வர, விமானம் 10 நிமிடம் தாமதம். அதற்குள் அனைத்து மத்திய மாநில ஊடகங்களிலும் தவிப்பு தவிப்பு என தலைப்பு செய்தியிலிருந்து ஒரே புலம்பல். ஆனால் நகர வாழ்க்கையின் அங்கமாகிப்போன போக்குவரத்து நெரிசல் மக்களுக்கு பழகிக்கொள்ள, சகஜமாக்கி கொள்ள வேண்டிய விஷயமா? மருத்துவர்,பொறியாளர்,கசக்கி பிழியப்படும் உழைக்கும் மக்கள் என மனித சமூகத்தின் கூறுகள் அனைத்தும் மணிக்கணக்கில் வீணாகிக் கொண்டிருப்பது நியாயமா? என எந்த ஒரு ஊடகத்திலும் FLASH NEWS-ஆகக் கூட போடப் படுவதில்லை. அது போதாது என ஒரு FM-ல் டென்ஷன் வேண்டாம், கோவம் வேண்டாம், கூலா நம்ம பாட்ட கேட்டுகினே பொறுமை வீடு போய் சேரச் சொல்லி அறிவுரை வேறு. மிகவும் நியாயமான உணர்வு கூட மழுங்கடிக்கப்படுகிறதே, அதை உணரமுடியவில்லையா?
விவசாய நாட்டில் இருப்பவர்களுக்கு கூட சோறு போட வக்கில்லாத அரசு ஏற்றுமதிக்கு உற்பத்தி செய்ய சொல்லியும், பண்டைய ரோமாபுரியில் மன்னர்கள், பணக்காரர்களுக்கு பொழுதுபோக அடிமைகளை ஆயுதங்களோடு மோதிக்கொள்ள சொல்வார்களே அது போல நாகரீக வளர்ச்சியில் இங்கு அவர்களை விட அறிவில் தாழ்ந்த, அடிமைப்புத்தி உள்ளவர்களை ஏலமுறையில் கூலிக்கு வாங்கப்பட்டு நடத்தப்படும் கிரிக்கெட் எனப்படும் போதையில் இருக்க வைத்தும், எந்த துறையை தனியார்மயமாக்கினாலும் டாஸ்மார்க்-கை அரசே லாபகரமாக நடத்தியும், எல்லா பிரச்சனைகளுக்கும் தனிமனிதன் மூலமே தீர்ப்பு சொல்லும் நாட்டாமைகள் நிறைந்த சினிமாகழிசடைகளையும் வைத்து மட்டுமே அந்நிய செலாவணிகளை பெருக்கி நாட்டை முன்னேற்றிவிடலாம் என்ற கதையளக்கும் முட்டாள் கோமாளி அரசியல்வாதிகளும், கூத்தாடிகளுமே நம் இளைஞர்கள் மனதை கவர்ந்து இழுக்கிறார்கள். கழுத்தை பிடிக்கும் நெருக்கடி வந்தாலும் கடவுளை நம்பிக்கொண்டு காலம் தள்ளும் பலருக்கும், அந்த கடவுளே காணாமப் போன வழக்கும் அவரது உண்டியல் காணமல் போன வழக்கும் நிலுவையில இருப்பது தெரியவில்லையே ஏன்?. மனு கொடுத்தும் எந்தப்பிரச்சனையும் தீரப்போவதில்லை. இருந்தாலும் அத கொடுக்கிறதுக்கு கூட நம்மை சந்திக்க வராத அதிகாரிகளும், ஓட்டுப்பொறுக்கிகளும், சினிமா கழிசடைகளுக்கும் செல்வச் சீமான்களுக்கும் பல்லை காட்டிக்கொண்டு காத்துக் கிடக்கிறார்கள். சீக்கியர் படுகொலையிலும், போபால் விஷவாயு நிவாரணத்திலும், நர்மதா அணை நிவாரணத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மனு கொடுத்தால் தீராது என்பதை அறிந்து அந்த மக்கள் தங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு சொல்கிறது. செத்தாலும் மனு கொடுத்து சாகனுமாம், போராடி செத்தால் அவன் தீவிரவாதியாம்.

களத்தில் போராட மறுக்கும் கணத்திலிருந்து எதுவும் நமக்கு சொந்தமில்லை. நம் வரிப்பணமும், வளங்களும் நமக்காக இல்லாமல் ஓட்டுப்பொறுக்கிகளின் வீண் பாதுகாப்பு, தரகு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் பாதுகாப்பான கொள்ளை லாபத்திற்கும் தாரை வார்க்கப்படும் போது உள்நாட்டு பொருளாதாரம் எப்படி வலுவாக இருக்கும். எஞ்சியுள்ள நம் மக்களின் சொற்ப வாழ்வினை காரணம் காட்டி மேலும் மேலும் உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IMF) இவற்றிடமிருந்து கந்து வட்டி போல கடன் வாங்கப்படுகிறது. விவசாயத்தை சார்ந்த நாடாக இருப்பதினால் அதை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்ற மண்வளத்தையும், மனிதவளத்தையும் பயன்படுத்தி தேசத்தை வளப்படுத்தாமல் இப்படி அனைத்தையும் தவணை முறையில் எழுதிக் கொடுத்துவிட்டு பிறகு கடன் வாங்கி ஆயுதம் குவித்துக்கொண்டு இருக்கிறார்களே, ஏன்?. அஹிம்சை பேசும் அமைதி நாடாம் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பசியால் இறந்து கொண்டிருப்பதும், கடந்த பத்தாண்டில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதுமே 70 விழுக்காடு விவசாய மக்கள் வாழும் 63 ஆண்டு சுதந்திரத்தின் சாதனை. இப்படியே போனால் ஒரு கட்டத்தில் நம் உள்ளூர் வங்கிகள் நம்மை என்ன செய்யுமோ அதையே தான் WB மற்றும் IMF-இடம் இந்தியா மொத்தமாக அடிமையாகிவிடும். ஆனால் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளர்ந்தால் அது முதலீடுகளுக்கான சூழலை (தரகு மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்கள்) பாதிக்கும் என்பதே உலகவங்கியின் மாமா மன்மோகன்சிங்கின் கவலையாக இருக்கிறது. நாடு அடிமையாவதை விட ஒருசில முதலாளிகளின் நலன் பாதிக்குமே என்பதில் தான் இவர்கள் கவலைப்படுகிறார்கள். எனவே அரசமரியாதையோடு, பாதுகாப்போடு வளங்களை சுரண்டிக்கொள்ள அந்நியனுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து தாய்நாட்டைக் கூட்டிக்கொடுக்கும் மாமா வேலையை அதிகாரிகளும், ஓட்டுப்பொறுக்கிகளும் செய்வதால் உண்மையில் தேசத்தை, மக்களை நேசிப்பவர்கள் சும்மா இருப்பார்களா? சுரணையின்றி இருப்பார்களா? வளர்ச்சி எனும் மோசடியில் இவர்கள் தொந்தி வளர்க்க கோடிக்கணக்கில் கடன் வாங்குவதை இனியும் பொறுப்பார்களா? சுரண்டலே அமைப்பாய் உருவான சமூகத்தில் அது தவறு என்பது உறைக்காத வரை, வரைமுறையின்றி நெடுங்காலமாய் சுரண்டப்பட்ட அந்த மக்களை, அவர்களின் போராட்டத்தை புரிந்து கொள்வது கடினம். அங்கே பசியும் பட்டினியும் தவிர எதையுமே அறியாத மக்களே தங்கள் வாழ்வின் ஆதாரமாய் உள்ள பூமியை தக்கவைக்க போராடுகிறார்கள். அரசால் ஒதுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட மக்கள், போலீஸ் மற்றும் வனத்துறையினரால் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டவர்கள் சிறிதேனும் தங்கள் கண்ணியத்தை மீளப்பெற்றனர் என்றால் அது அவர்கள் தோளோடு தோள் நின்ற மாவோயிஸ்டுகளால்தான். பன்னாட்டு கம்பெனிகளின் இந்த கொள்ளை வெறிக்காக பழங்குடியின மக்களும், பன்னாட்டு கப்பல் கம்பெனிகளின் எல்லை தாண்டிய உரிமைக்கு மீனவர்களும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயிகளும் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் போரை எதிர்த்து போராட துவங்கிவிட்டனர். இன்று அவர்களுக்கு என்னவோ அதுவே அவர்களை சார்ந்து வாழும் நமக்கும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். எனவே மிகவும் நியாயமான அந்த மக்களின் போராட்டத்திற்கு நம் ஆதரவை மக்களிடம் கொண்டுசெல்வதோடு, எண்ணிலடாங்கா நம் துயரங்களுக்கும் போராட்டமே தீர்வு என்பதையும் புரிந்து கொண்டு புரட்சிகர அணிகளின் பின்செயல்படாமல் நமக்கான விடியல் நாளை இல்லை.

செவ்வாய், ஜனவரி 26, 2010

காட்டு வேட்டை எனும் உள்நாட்டுப் போர்

மாவோயிஸ்டு, நக்சல் ஒழிப்புப் போரென கொக்கறிக்கும் அரசின் பயங்கரவாதம் தொடுத்திருப்பது உண்மையில் ஏழை மக்களுக்கெதிரான ஓர் உள்நாட்டுப் போர். ஆனால் மாமா மன்மோகன்சிங்கும், மாமா ப.சிதம்பரமும் இது உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான போர் என்று ஓயாமல் சொல்வதோடு அத்தனை ஊடகங்களும் அரசின் அறிக்கையாய் இதே பல்லவியே பாடிக்கொண்டிருக்கின்றன. இதில் யார் சொல்வதில் உண்மை என்பதில் சந்தேகம் எழலாம். உண்மையை இரண்டு விதமாக பேசுவதால், யாருக்கான நன்மையை யார் பேசுகிறார்கள் என்று அறிவது மிக அவசியமாகிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கி உள்ள அம்மக்களை அரசியலின் பெயராலும் முடக்கி ஒழிக்கவே இந்தப்போர். முதலில் அமைதியை நிலைநாட்டி பின் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப் போவதாக சொல்லியிருக்கும் இந்திய அரசு, கடந்த கால கட்டங்களில் தன் இராணுவத்தின் மூலம் எந்த மாதிரியான அமைதியை நிலைநாட்டியது என்பதற்கு காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், வடகிழக்கு மாநிலங்கள், ஈழத்து மக்களிடம் போய் கேளுங்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றிற்கு எதிராக பாதுகாப்பு என்ற பேரில் காஷ்மீரில் 7 லட்சம் துருப்புகள், வடகிழக்கு மாநிலங்களில் 2 லட்சம் துருப்புகளையும் வைத்துக்கொண்டு எத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள், சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள், எத்தனை பெண்கள் வண்புணர்ச்சி செய்யப்பட்டார்களோ அதுவே இவர்களது அமைதி நடவடிக்கையின் சாதனை. இந்த கொடுமைகளுக்கு எதிராக அந்தந்த மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் போராட்டத்தை திட்டமிட்டே ஊடகம் அனைத்தும் மறைத்தாலும் உண்மை என்றும் மறைவதில்லை. மணிப்பூரிலும் அப்படி ஒரு வீரப்பெண் ஐரோம் ஷர்மிளாவின் அரசின் அடக்குமுறைக்கெதிரான உண்ணாநிலை போராட்டம் 8 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது(இந்திய ஓட்டுப்பொறுக்கிகளின் உண்ணாநிலை நாடகம் போல அல்ல). அப்படியே அஸ்ஸாமிலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும் தங்களின் கலாச்சாரம், மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதரம் எல்லாம் பிடுங்கப்பட்டதாலேயே சுயநிர்ணய உரிமைக்காக போராடும் மக்களை இந்திய தேசியத்தில் குதித்து போதை ஏற போதிக்கிறது தேசபக்தி பேசும் அறிவுஜீவிகளின் முட்டாள்தனமான அறிவுரைகள்.

மேற்குவங்கம் தொடங்கி ஆந்திரம் வரை ஏவிவிடப்பட்டுள்ள இந்த உள்நாட்டுப்போரில் சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஒரிசாவில் காடுகள், மலைகள், நதிகளென செழித்த பகுதியில் எந்த அடிப்படை வசதியும் பெறாத, கேள்விப்படாத பழங்குடி இன மக்களின் வளர்ச்சி திட்டங்களை தடுப்பதாகக்கூறி அரசு கடந்த வருட கடைசியில் ஆரம்பித்திருக்கும் இந்தக் காட்டு வேட்டை (Green Hunt) அங்குள்ள ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளை ஒழிக்க அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் சொல்லும் சனநாயக வழிமுறைகளை மறுப்பதோடு, சட்டத்திற்கு புறம்பாக ஆயுதம் வைத்து உள்நாட்டுப்பாதுகாப்பை அச்சுறுத்தி வருகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு உண்மையா? என்றால் துளியும் உண்மை இல்லை. மக்கள் நலனுக்காகவே போராடும் மாவோயிஸ்டுகள் 60-களில் நக்சல்பரி எழுச்சியின்போதே கொண்ட நோக்கத்திற்காக செயல்படுகிறார்கள். தவிர இவர்கள் சொல்வது போலான மாவோயிஸ்டுகளின் போராட்டம் நேற்றோ அதற்கு சில மாத, வருடத்திற்கு முன்போ துவங்கியதல்ல. இவர்களின் இப்போதைய நலத்திட்டங்களுக்கு மவோயிஸ்டுகள் தடையாய் இருக்கிறார்கள் என்றால் பின் தங்கிய அம்மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய இதுநாள் வரை தடுத்தது எது? அல்லது 60 வருடமாக இவர்கள் சொல்லும் சுதந்திர இந்தியாவில் இதுவரை மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை வெளியிட முடியுமா? அல்லது இனிமேலான நலத்திட்டத்தில் மக்களும், நாடும், முதலாளிகளும்(தரகு, பன்னாட்டு) அடையப்போவதை வரையறுக்க முடியுமா? முடியாது. சொன்னால் உண்மையை மக்கள் அறிவார்கள். அதனால் தான் போராடும் அம்மக்களையும் அதற்கு துணை நிற்கும் போராளிகளையும் பயங்கரவாதத்தின் பெயரால், தீவிரவாத்தின் பெயரால் உலகம் முழுதும் ஒரு பொதுக்கருத்தை பரப்பி எதிர்ப்பின்றி கொன்றுவருகிறார்கள். அதனால் நண்பர்களே இந்த பொதுக்கருத்தின் குறுகிய வட்டத்தில் இல்லாது வெளியே வந்து சிந்தியுங்கள். தகவல் அறியும் உரிமையின் கீழ் இதுவரை அப்பாவிகள் யாரையும் கொல்லவில்லை என்னும் உண்மையும் தெரியவருகிறது. தண்டகாரண்யா, நியமகிரி மலைகளைச் சுற்றியுள்ள மக்கள் அடிப்படை வசதிகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், சாலை, மின்வசதி ஏதுமின்றி இருக்கும் அற்ப வாழ்வையும் பறிக்கும்போது தான் அரசை நேரடியாக சந்திக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் பன்னாட்டு நிறுவனங்களுடன் 100 ஒப்பந்தம் கையெழுத்தானது. எதற்கும் வராத அரசு பன்னாட்டு நிறுவனத்தின் கைக்கூலியாய், அவன் நலனுக்காய் அந்த மலையை பிடுங்கிக் கொடுக்க துடிக்கிறது. தண்டகாரண்யா, நியமகிரி மலைகளில் புதைந்திருக்கும் பலலட்சம் கோடி மதிப்பிலான இயற்கை வளங்களை பிரிட்டீஷின் வேதாந்தா நிறுவனம் உட்பட பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்நாட்டு வளத்தை எழுதிக்கொடுக்கவும், அதற்கு தடையாய் உள்ள மக்களை அழிக்கவும் மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூ.7300 கோடி.

மும்பை தாக்குதலில் பணக்காரர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் பதறிய அரசு சிறப்பு கமேண்டோ-களை அனுப்பியதையும், அவர்கள் மீட்கப்பட்டதையும் நேரடியாக ஓளிபரப்பி தேசபக்தி பீதியூட்டிய ஊடகங்களை கொஞ்சம் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க முடியுமா? முடியாது. ஏன் என்றால் இங்கு அத்துமீறி இருப்பது இந்திய அரசே. அம்மண்ணில் உள்ள மொத்த மக்களையும் வெளியேற்றிவிட்டு நலத்திட்டங்கள் நிறைவேற்றப் போவதாகச் சொல்லும் இந்திய அரசு அது யாருக்கானது என்பதை சொல்லாமல் விட்டாலும் நாம் புரிந்து கொள்ளதான் வேண்டும். ஜனநாயக வழிமுறையை மாவோயிஸ்டுகளைப் பின்பற்றச் சொல்லும் மாமா ப.சிதம்பரம், சட்டீஸ்கரில் ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரசின் ஆயுதமேந்திய கூலிப்படையான சல்வாஜுடுமும் நக்சல் போராளிகளை ஒழிக்க கூட்டுச் சேர்ந்துள்ளதைப்பற்றி மட்டும் பேச மறுக்கிறார். எல்லாம் அமெரிக்க ஆண்டையின் செயல்.

இயற்கையின் வளத்தை சுரண்டவும், மக்களின் உழைப்பை சுரண்டவும் அந்நிய மூலதனத்தை அழைத்து வரும் கேடுகெட்ட அரசியலும், முதலாளித்துவமும் இன்னும் எவ்வளவு சுரண்டினால் நாம் உணரப்போகிறோம். வரலாற்றில் இதுவரை கடந்ததை நாம் ஆராய்ந்தோம் என்றால் தெரியும். மத்தியபிரதேசத்தில் என்ரான் எனும் அமெரிக்க நிறுவனத்துக்கு மாநில மின் துறையை தூக்கி கொடுத்தனர், துறையை மொத்தமாக திவாலாக்கிவிட்டு அது தன் ஊர் போய் சேர்ந்தது. போபால் Union Carbide அமெரிக்க நிறுவனத்தில் நடந்த விஷவாயு கசிவு 26 வருடத்திற்குப் பிறகு இன்றும் அங்கு குழந்தைகள் குறைபாட்டோடு பிறப்பதோடு, பலருக்கும் விபத்துக்கான நஷ்டஈடு கொடுக்கப்படவில்லை. அடிப்படை தேவை கூட இல்லாமல் நாளும் நம்மை கொல்லும் அரசுக்கு, நாம் செலுத்தும் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு (TATA, Birla, Reliance, Mittal, etc..) வரிச்ச்லுகை கொடுக்கவே போதாமல், பாவம் மலை, நதிகளை எல்லாம் விற்று வாழவைக்கிறார்கள் என்றால் நமக்கு ஏன் இந்த அரசு எனும் கேள்வியில் நியாயம் இல்லை என்றா சொல்வீர்கள். எல்லாம் தனியாருக்கு எனும் சொல்லில் இந்த அரசு போய்கொண்டிருக்கும் போது அதில் நிலம், நீர், காற்று அனைத்தும் அடங்கிவிட்டது. செத்தாலும் போராட்டம் தவறு என்பவர்கள், நேர்மை, சமரசமற்ற அரசியல் எனும் நக்சல் தலைமையிலான போராட்டத்தை பொறுக்க முடியாமல் இந்த உள்நாட்டுப்போரை அமெரிக்க தொழில்நுட்பமும், ஆயுதமும் வழிநடத்துகிறது. உலகமகா உயிர்கொல்லி ஆயுதத்தை ஈராக் வைத்துள்ளாதாகக்கூறி பயங்கர ஆயுதங்களோடு முன்வாசல் வழி வந்த எண்ணெய்த் திருடன் அமெரிக்கா வந்த வேலை முடிந்ததும் பின் வாசல் வழி எத்தனிக்கும் போதும் உலகம் புரிந்து கொள்ளாததை ஈராக் மக்கள் இழப்புகள் தாண்டி அமெரிக்க படைகளுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் அப்படியே, இந்த வளங்களை கொள்ளையிட அரசு இதுவரை 1,50,000 ஹெக்டேர் நிலங்களை தனியாருக்கு சிறப்பு பொருளாதார மண்டலம்(Special Econamoc Zone) எனும் பெயரில் சீர் கொடுத்துள்ளது. இங்கு நாம் போராடி பெற்ற எந்த இந்திய சட்டமும் செல்லாது. இன்னும் இது போன்ற லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களை பிடுங்கி கொடுக்க இருக்கிறது. எல்லாவறிற்கும் காரணமான இந்த அதிகாரிகள், அரசியல், பொறுக்கிகளே அரசியல் தலைவர்கள், அடிமைப்புத்தி உள்ளவர்கள் தங்களோடு சேர்த்து இந்த நாட்டு மக்களும் அடிமைகள் என்று ஒப்பந்தம் எழுதிக்கொடுக்க எவ்வளவு திமிர் இருக்க வேண்டும். இதை தட்டிக்கேட்க தகுதி கொண்ட பத்திரிக்கைகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் எல்லாம் இவர்களுடன் கூட்டுக் களவானிகளாக இருக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை உணரவேண்டும்.

300 வருடத்திற்கு முன் துரோகமே உருவான அரசர்களும், வியாபாரிகளும், நிலப்பிரபுக்களும் சேர்ந்த சிறு சதிகாரக்கும்பல் இந்தியத்துணைக் கண்டத்தை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்துக்கு விற்றது ! அச்சதிகார கும்பலின் இன்றைய வாரிசுகள், இந்தியாவை பல நாடுகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆம், நாடு அடிமையாகிக் கொண்டிருக்கிறது. 3 கோடி மக்கள் பட்டினியிலும், 20 கோடி மக்கள் அரைப்பட்டினியிலும், 35 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைவாகவும் இருக்கும் போது பெற்ற விளைச்சலை பதுக்கி வைத்து காய்ந்த வயிரின் மீதும் ஆன்லைனில் சூது விளையாடி பங்குசந்தை உயர்வில் பெருமை பேசும் நாட்டில் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, அண்மையில் தேர்தல் ஆணைய வைர விழா போன்ற கேலிக் கூத்துகளும், அவற்றிற்கு ஆகும் செலவுகளும் அவசியம் தானா? விலைவாசி, கல்வி, மருத்துவம், சுகாதாரம் எல்லாம் காசு இருந்தால் மட்டும் என்று திட்டமிட்டு அரசு அனைவரையும் புறக்கணிக்கும்போது சுயநிர்ணய உரிமையை விட , முலதனத்திற்கு எதிரான போர் மிக அவசியமாகிவிட்ட நிலையில் பொது எதிரியை வீழ்த்த பாதிக்கப்பட்ட மக்கள் மொழி, இனம், மதம், கடந்து ஒன்றுசேர வேண்டும். முதலாளித்துவம் மெல்ல தன் சாவை நோக்கி வேகமாய் நகரும் நிலையிலும், புதிய பொருளாதாரக் கொள்கைகளோடு எல்லை கடந்த சுரண்டலில் இறங்கி மேலும் மேலும் கொழுப்பதோடு, வறுமையில் பெரும்பான்மை மக்களை தள்ளிவிடுகிறது. மேலும் திருட, திருடியதை பாதுகாக்க, அரசின் அடக்குமுறை பல்வேறு வடிவங்களில் வெளியே தெரிகிறது. இதை உணர்ந்து இந்த வர்க்க உணர்வுள்ள மக்கள் ஒன்று திரண்டு போரட வேண்டும். வர்க்க முரண்பாடுகளை மழுங்கடிக்க நினைக்கிற அதே வேளையில் தன்னையறியாமல் உழைக்கும் மக்களிடையே தேவைப்படும் ஒற்றுமையை இது மேலும் வலுப்படுத்தவில்லையா! போராடும் மக்களின் நியாயமும், நம் போராட்டம் துவக்க வேண்டியதன் நியாயமும் புலப்படவில்லையா? தாமதிக்காமல், சமரசமின்றி போராடும் போராளிகளின் பின் அணி திரளுங்கள்.