புதன், ஜனவரி 21, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

இந்த மாநாடு உங்களுக்காகத்தான் வாருங்கள்


"எல்லாம் தனியார் மயம்", போராடி பெற்ற எந்த ஒரு உரிமையும் தொழிலாளிக்கு சொந்த நாட்டிலே கிடையாது, 1958ல் நிறைவேற்றப்பட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் ஒப்புக்கு அப்படியே உள்ளது, விவசாயம் பசுமைப்புரட்சி என்று உணவு நஞ்சானதும், மண் மலடானதும், விவசாயி தற்கொலையுமே மிச்சம். ஜனநாயகம் பணநாயகமானதை தேர்தலில், சட்டசபையில், பாராளுமன்றத்தில் நிரூபித்தார்கள். ஆதிக்க சாதி மற்றும் அரசுக்கு அடியாளாக உள்நாட்டில் போலீஸும் எல்லையில் இராணுவமும் திறம்பட செயல்பட, சாமியார்களும் தொழிலதிபர்களும் சினிமாக்காரர்களும் கல்லாவை கட்ட, இலக்கிய மொக்கைகள் ஏதேதோ எழுத, சிலர் அதை படித்துவிட்டு ஒரு பக்க வாந்தி எடுக்க இன்னொரு ப‌க்கம் அரசே உருவாக்கும் அடுத்த தலைமுறை குடி மக‌ன்கள்.

சமச்சீர் கல்வி இல்லை, விருப்பமான துறையில் படிக்க வாய்ப்பும் வசதியும் இல்லை, படித்தாலும் வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் நிரந்தரம் இல்லை, எதற்கு இந்த அரசும் சட்டமும் இருக்கிறது, யாருக்காக பயன்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டாமா. பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கை குறைந்தபட்ச உத்தரவாதம் கூட இல்லாமல் இருக்கும் நாட்டில் வர்க்கமாய் திரண்டு போராட எழாமல் புலம்பிக் கிடக்கும் இளைஞர்களே, நண்பர்களே இந்த மாநாடு உங்களுக்காகத்தான் வாருங்கள்.

அமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை காப்பாற்றுவதற்கு எல்லா அரசுகளும் முனைப்புடன் செயல்படுகின்றன. மக்களின் வரிப்பணத்திலிருந்து இந்த நிறுவனங்களை தூக்கி நிறுத்துவதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அள்ளி வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த மோசடி முதலாளித்துவம் கொண்டு வந்த பொருளாதாரச் சரிவில் வாழ்விழந்து, வேலையிழந்து தவிக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறியதும், பெரியதுமாய் சுமார் 1500 தொழிற்சாலைகள் உள்ளன. அமெரிக்க பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்றுமதி சரிந்து, பின்னர் பல இந்திய ஆட்டோமோபைல் நிறுவனங்கள் உற்பத்தியை வெகுவாகக் குறைத்துள்ளன. டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹூண்டாய் முதலான நிறுவனங்கள் ஒரு ஷிப்ட் வீதம் மாதத்திற்கு பதினைந்து நாட்கள் மட்டும் பணி செய்கின்றன. இந்நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் அதிகம் என்பதால் இவர்கள் அனைவரும் தமது மாத வருமானத்தை இழந்து தவிக்கின்றனர். இந்நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரித்து வந்த பல நூறு நிறுவனங்களும் கதவடைப்பு செய்துள்ளன.

அம்பத்தூரில் இருக்கும் இத்தகைய துணை நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலையில்லாமல், வருமானமில்லாமல் தவிக்கின்றனர். முதலாளிகளின் வீழ்ச்சியின் சுமையை இறுதியில் தொழிலாளர்களே சுமக்க வேண்டிய நிலை. மேலும் அம்பத்தூரில் உள்ள ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களிலும் இதுதான் நிலைமை.

சத்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் ஐ.டி துறையிலும் வேலையின்மை என்ற அபயாம் தலைதூக்கியிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க நெருக்கடியை சாக்கிட்டு ஆட்குறைப்பு, செலவினம் குறைப்பு என்ற பெயரில் பலர் நீக்கப்பட்டு வந்த நிலையில் சத்யத்தின் வீழ்ச்சி எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல ஆயிற்று. தமிழகத்தில் ஆண்டுதோறும் படித்து வெளியேறும் 1,20,000 பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் ஐ.டி துறையின் வளமான கனவுடன்தான் இருக்கின்றனர். ஏற்கனவே கேம்பஸ் இன்டர்வியூவில் தெரிவானவர்கள் வேலைக்கு அழைப்பு வராமல் தவிக்கிறார்கள். இதில் இனிமேல் படித்து வெளியேறும் இந்த பொறியியல் மாணவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது.

பிரச்சினைகளுக்கு முடிவில்லை. தீர்வு என்ன?

முன்னெப்போதையும் விட தொழிலாளர்கள், ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் வலுவான தொழிற்சங்கங்களில் அணிதிரள்வதே இந்தப் பிரச்சினைகளுக்கு எதிரான முதல் படியாகும். முதலாளிகளுக்கு என்று கூட்டமைப்புக்களும், அரசுகளும், இன்னும் பல அமைப்புக்களும் இருக்கும்போது தொழிலாளர்களுக்கென்று அதைவிட பலமான அமைப்பு வேண்டுமென்பதை விளக்கத் தேவையில்லை. உலகமயமாக்த்தின் கேடுகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதும், தொழிலாளர்கள் தன்னுணர்வு பெறுவதும் வேறு வேறல்ல. விவசாயிகளின் தற்கொலையும், தொழிலாளர்களின் பணி நீக்கமும் தனித் தனிப் பிரச்சினையல்ல.

இந்தச் சூழ்நிலையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எனும் புரட்சிகரத் தொழிலாளர் அமைப்பு அம்பத்தூரில் வரும் ஜனவரி 25 ஆம் நாள் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு ஒன்றை பிரம்மாண்டமாக நடத்துகிறது. அந்நாள் முழுக்க மேற்கண்ட பிரச்சினைகள் பற்றிய கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்)நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பத்தூர் OT மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

பதிவர்களையும், வாசகர்களையும், ஐ.டி துறை நண்பர்களையும் இந்நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நட்புடன்

கதிர்.

மாநாடு தொடர்புக்கு :

அ. முகுந்தன்: 94448 34519, 94444 42374
பாண்டியன்: 99411 75876