ஏ.. சமூகமே எங்கே செல்கிறாய்?
பெயர்ப்பலகை இல்லாத பேருந்து போல
சேறுமிடம் அறியாமல் செல்லும் நீயும்,
இலக்கில்லாமல் பாயும் அம்பு போல
அர்த்தமற்று போகும் உன் வாழ்வும்.
எதிரிகளாலும், துரோகிகளாலும்
உன்னைச் சுற்றி எழுப்பப்பட்ட சவக்குழிகள்
உனக்காக என்றபோதும் ஏனிந்த அமைதி.
அடிப்படை உரிமைகளே பறிக்கப்பட்டாலும்
ஆன்மீகச் சிந்தனை வருவதேன்?
அடக்குமுறைகளே அரசின் முகமாயின்
உதாவாத அஹிம்சை ஏன்?
ஒடுக்கப்பட்ட மக்களே எங்கு காணினும்
நம்மில் ஒற்றுமை இல்லையே ஏன்?
ஒட்டுமொத்த உலகமே...
விவசாயி, தொழிலாளியால் இயங்கும் போது
ஒன்றுசேர்ந்து போராட மறுப்பதேன்?
போராட தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
நம்மில் ஒருவன் நிச்சயம் இறக்கிறான்.
போகிற உயிர் போரட்டத்தில்தான் போகட்டுமே...!
வாழ்வாவது முழுமைபெறும்.
அடிப்படை தேவைகள்கூட பூர்த்தியாகாத சமூகத்தின்
அவலநிலை சொல்லித்தெரிய அவசியமில்லை.
இருந்தபோதும்
வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கமென
உயிர்கொல்லிகளை சமூகத்தில் ஊடுருவ விட்டு
வேடிக்கைப்பார்க்கும் "உலகின் மிகப்பெரிய" ஜனநாயகம்.
அவலங்கள் சில....
சிறிய, பெரிய கட்டுமான நிறுவனங்கள் தங்களின் கூலித்தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு வெளிநாட்டிலிருந்து அழைத்துவர மையஅரசிடம் மனு கொடுத்துள்ளனர்.
சொந்த நாட்டில் அகதிகளாய் மாநிலம் கடந்து அடிப்படை வசதி இல்லாமல் சாப்பாட்டிற்கே அல்லல்படும் கூலித்தொழிலாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பில் சரியான கூலியும், ஓய்வும் கிடைத்தால் இங்குள்ள மக்கள்சக்தி போதாதா என்ன?
சமச்சீர்கல்வி இல்லாமல் காசுக்கேத்த கல்வியென அடிப்படைகல்விக்கு புதுஅத்தியாயம் எழுதிய இந்த பணநாயகத்தில் மாணவர்கள்மட்டுமா, ஆசிரியர்களும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனரே.
அரசும், அதிகாரிகளும் போட்ட துப்புகெட்ட சட்டமான மாவட்ட வாரியான பதிவுமூப்பின்படி நியமனம் என்பதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பட்டயப்படிப்பு முடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடந்த ஏழுமுறை பணிநியமனம் அனுப்பியும் குறிப்பிட்டு கன்னியாகுமரியில் ஒருவருக்குகூட வேலைகிடைக்கவில்லை.
தென்மாவட்டத்தில் உள்ள பயிற்சிபள்ளிகளில் ஒவ்வொன்றிலும் 50 ஆண் பெண் என மொத்தமாய் அங்கு 2000 பேர் வெளிவந்தும், சமூகத்தின் தேவை இருந்தும் தேவையில்லாத சட்டத்தின் அடிப்படையில் வீணடிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர் துயரம் மீளாத்துயராய், திமிர்ப்பிடித்த இலங்கை கடற்படையினரால் சுடப்படும்போது அரசின் செயல்பாடும், நிலைப்பாடும் எப்படி உள்ளது.
ஒரு குடும்பத்தின் தலைவன் இப்படி திடீரென இறந்துபோனால் அக்குடும்பம் அடையும் வாழ்நாள் துயரம் எவ்வளவு பணத்தில் (அ) எந்த வார்த்தையில் சரிகட்ட முனைகிறார்கள்.
போலிஅரசியல், ஆன்மீகம், ஆடம்பரம், கிரிக்கெட், சுயநலம், சினிமா கழிசடைகள் போன்ற போதைகளில் மூழ்கித்திளைக்கும் இளையசமுதாயத்தின் அக்கறையும் நிலையும் கூட கவலைக்கிடம் தான்.
பணநாயக அரசியலில் மூத்தவர்களை முந்தும் இளைஞர்கள். இந்தியாவின் மேகாலயாவின் இளம் MP-யான அகதா(27) நேற்று நடந்த நாடாளுமன்ற கூத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள வந்தவர், "அணுசக்தி ஒப்பந்தம் பற்றி என்னவென்றே தனக்கு தெரியாது, இருந்தும் நான் ஆதரிக்கிறேன்" என்கிறார். இளைஞர்களாக உள்ள ராகுல் போன்றோரின் செயல்பாடுகள் விரும்பத்தக்கதாகவும், அதனாலேயே தானும் ஈர்க்கப்படுவதாக கூறி(கூட்டத்தில் கோவிந்தா) தனது நிலையை வெளிப்படுத்தினார்.
எல்லா கூத்தும் அரங்கேறிய அந்த பன்றிக்கூடத்தில் நேற்று இந்திய ஜன(பண)நாயகத்தின் கோவணம் அவிழ்த்துக்காட்டப்பட்டது. MP-க்களின் சந்தைவிலை நேற்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வின்னை முட்டியது. நம்பிய மக்களை நாசம் செய்த MP-க்கள் நல்ல விலைக்கு வித்துக்கொண்டதுடன் தங்களை ஒரு தேசிய போராளியாக காட்டிக்கொண்டனர். இந்த வீணர்களின் வெற்றி விமர்சனமாய் ராகுல்காந்தி பேசும்போது, ராஜிவ்காந்தி, நரசிம்மராவ் இவர்களின் சீர்திருத்தப்பாதையில் பிரதமரின் பணி தொடருமென கூக்குரலிட்டார். கட்சிகள் மாறி ஓட்டுப்போட்டதும், கொள்கைகள் முரண்பாடானதும், பணமே அனைத்திற்கும் தலைமை வகிப்பதும் உலகமே நேரடியாக பார்த்ததில் இந்திய ஜன(பண)நாயகம் நிர்வாணமாய் போஸ் கொடுத்தது.
541 பன்றிகளும் மூன்று பிரிவாக பிரிந்து மாறி யோக்கியசிகாமணிகளாய் உள்கூட்டு விபசாரத்தில் தங்களின் நாடகத்தை அரங்கேற்றி மக்கள் அனைவரையும் முட்டாளாக்கினார்கள் (அப்பவாவது நமக்கு கோவம் வந்து உருப்படியா எதையாவது செய்யமாட்டோமா என்பதாய் கூட நாம் எடுத்துக்கொண்டிருக்கலாம்). ஆனாலும் Match Fixing போல நம்பிக்கை ஓட்டெடுப்பின் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாகவே அமெரிக்க ஏகாதிபத்திய திமிர் வெளிக்கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பின் வெற்றிக்காக மன்மோகன்சிங்கை வாழ்த்தியது. எரியிர கொள்ளியில தலைவிட்டது போல, தேவையை காரணம் காட்டி தேவையில்லாத திட்டத்தில் மக்களின் வரிப்பணம் அம்போவென போகிறது. மக்கள் விழிப்பார்களா?
110 கோடி மக்களில் 80 விழுக்காடு மக்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவென அரசின் குறிப்பு சொல்கிறது. உலகத்துக்கே சோறுபோட்ட விவசாயிக்கு சோறு இல்லையென கைவிரிக்கும் கைய்யாலாகாத அரசு, பொறுப்புகளை கைகழுவும் பொறுப்பில்லாத அரசு, டாஸ்மார்க் மட்டுமே நிர்வாகம் பன்னதெரிந்த அரசு, சமீப காலத்தில் பொருளாதாரத்திலும் விவசாயத்திலும் தன்னிறைவு பெற்றதாக கூறும் தன்மானமில்லாத இந்த அடிமைவல்லரசு கடந்த 10 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளை ஈவிரக்கமின்றி திட்டமிட்டே கொலைசெய்துள்ளது. 15கோடி ஹெக்டேர் நிலம், வருடத்தில் 220 நாள் சூரியஒளி, 880 மி.மீ மழை,மிகப்பெரிய மனிதவளம் இருந்தும் அரசியல் ரீதியில் சரியான கொள்கையும் மன உறுதியும் இல்லாததால் பசி, பஞ்சம், விலைவாசி உயர்வு, பணவிக்கம்.............எல்லாம்.
பதுக்கல், கள்ளசந்தை, முன்பேரவணிகம்.....முதலானவற்றை இரும்புக்கரம்கொண்டு அடக்கவும், தீர்வாய் எல்லோருக்குமான பொதுவிநியோகமுறையை நெறிப்படுத்தவும் ஒன்றிணைந்துப் போராடாமல் தானாய்மாறும் என்பதைப்போல் வாய்ப்பேதும் இருப்பதாய் உறங்கிக்கொண்டே கனவுகாணாதீர்கள்.
வியாழன், ஜூலை 24, 2008
விடியாமல் முடியாது..
குறிச்சொற்கள்:
அஹிம்சை,
ஆன்மீகம்,
கள்ளசந்தை,
பதுக்கல்,
முன்பேரவணிகம்,
ஜனநாயகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)