செவ்வாய், பிப்ரவரி 09, 2010

உள்நாட்டுப்போர் கேட்பது உங்களுக்குள் இருப்பது போராளியா? (அ) கைக்கூலியா?

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் சத்தமின்றி துவக்கப்பட்டிருக்கும்போதும் அதற்கு விண்ணை பிளக்கும் பதிலடியாய் மக்களும் மாவோயிஸ்டுகளும் இறங்கியிருக்கிற களம் பற்றி அறியவேண்டியதன் அவசியம் நாளும் கூடிக்கொண்டே வருகிறது. மத்திய உள்துறை அமைச்சரும், கார்ப்பரேட் கம்பெனிகளின் மாமாவுமான .சிதம்பரம் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக, அந்நிய முதலீடுகளுக்கு இடையூறாக உள்ள மாவோயிஸ்டு, நக்சலைட்டுகளை அழிக்கவே இந்த காட்டுவேட்டை எனப்படும் Operation Green Hunt ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்கிறார். நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கும், பழங்குடியின மக்களின் நலத்திட்டங்களுக்கும் தடையாய் இருப்பதாக மிகவும் கவலை தெரிவிக்கிறார். "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை தான்". இந்த ஓநாய் அழுவது கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகளுக்காக, அவர்கள் தரும் பணத்திற்காக. கல்வி, மருத்துவம், சுகாதாரம், பொதுத்துறை,குடிநீர்,சாலைகள் என எல்லாம் தனியார்மயம். கட்டுக்கடங்காத விலைவாசி, உத்தரவாதமில்லாத வேலையும் அதன் கூலியும் என எதைப்பற்றியும் அரசுக்கு கவலையோ, அக்கறையோ சிறிதும் இல்லை. இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது தீவிரவாதம், பயங்கரவாதம்னு மக்களின் தார்மீக எழுச்சியை வேறு வழியில் திசை மாற்றும் வேலையே அரசின், அதிகாரவர்க்கத்தின், முதலாளிகளின் போக்காய் இருக்கிறது. சமூகத்தில் இம்மாதிரி ஒரு அடிப்படை வசதியோ, கேடுகெட்ட அரசோ இருப்பது ஏதும் அறியாமல் போலி சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேல் வாழும் அம்மக்களுக்கு திடீர் நலத்திட்டம் போட்ட மர்மமென்ன? ஒரு வேளை ஞாபகம் வந்து நல்லது செய்ய வந்திருப்பாங்கன்னு யாரும் நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல. வந்தது எட்டப்பனின் வாரிசுகள், தங்கள் முப்பாட்டனின் செயல்வழியிலேயே மீண்டும் புதிய பல ஒப்பந்தங்களோடு தனியார்மயம் எனும் சிறப்பு பொருளாதார கொள்கை அடிப்படையில் தாய்நாட்டை கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். வீடுகள், விளைநிலங்கள் என ஆரம்பித்து ஆறுகள், மலைகள், காடுகள், கடல்களென பல லட்சம் கோடி டாலர் மதிப்பிலான இந்நாட்டின் வளங்களை பாதுகாப்போடு திருடிக்கொண்டு போக சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படுவதே இந்தப்போர். இதை எதிர்ப்பவர்கள் யாராயினும் அவர்களை நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த இந்த அரசும், நம் வரிப்பணத்தில் வருமானம் பெறும் காவல்துறையும், இராணுவமும் சேர்ந்து மாவோயிஸ்டு என்றும், தீவிரவாதி என்றும் முத்திரை குத்துவதோடு சித்ரவதை செய்யும், தேவைப்பட்டால் கொலையும் செய்யும். இலங்கையில் போராடிய விடுதலைப்புலிகளின் பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது போலவே இங்கும் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகளின் பெயரால் பழங்குடியின மக்களும் சித்ரவதையோ, கொலையோ செய்யப்படுவார்கள். இதற்காக BSF, CRPF, JMF எனப் பல்வேறு அரசபடைகளோடு சல்வாஜூடும் என்கிற மக்கள் கூலிப்படையும் இறக்கிவிடப்பட்டுள்ளது.

அவர்கள் மாவோயிஸ்டுகளின் பெயரால் 2 வயது குழந்தையின் கைவிரல்களை வெட்டியிருக்கிறார்கள். பெண்களை வண்புணர்ச்சிக்குள்ளாக்கியது, அவர்களை ஊனமாக்கியது, ஆண்களை சித்ரவதை செய்வது, கொல்வது என தங்களது ராஜகத்தை கேள்வி கேட்பாரின்றி அரங்கேற்றி வருகிறார்கள். பல லட்சம் கோடி மதிப்பிலான இந்த மக்கள் வாழும் மலையை பங்குபோட்டுக்கொள்ள பிணந்திண்ணி கழுகுகளாய் வந்துள்ள தரகு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து ஓட்டுப்பொறுக்கிகள், அதிகாரிகள் என தொடர்ந்து ரூ.2000 சம்பளத்திற்காக கைகூலிகளாய் போன துரோகிகள் வரை கூட்டிணைவாய் அம்மக்களை கொன்றாவது வளங்களை கொள்ளையிட வேண்டுமென்பதில் குறியாய் உள்ளன. இந்த படைகள் இதுவரை 700 கிராமங்களை எரித்து, 30 ஆயிரம் மக்களை முகாம்களிலும், 3 லட்சம் மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்தும் துரத்தியிருக்கிறார்கள். இத்தனை மக்களையும் துரத்தியபின் அரசு எந்த மக்களுக்காக செய்யும் நலத்திட்டங்களுக்கு மாவோயிஸ்டுகள் தடையாய் இருக்கிறார்கள் என்று உங்களுக்குள் கேள்வி எழும். சந்தேகமின்றி அது பன்னாட்டு முதலாளிகளும் (Vedhantha, Essar, Bosco, Riodindo, etc..), தரகு முதலாளிகளும் (Tata, Birla, Reliance, Mittal, etc..), திருடி அடிக்கத்துடிக்கும் கொள்ளை லாபத்துக்குத்தான் போராடுபவர்களையும், போராளிகளையும் தீவிரவாதி என்கிறார்கள். எனவே தீவிரவாதி, பயங்கரவாதி என்று ஊடகம், தினசரிகளில் வரும் பொதுக்கருத்துக்கு ஆளாகி வீழ்ந்து விடாதீர்கள். நம் வரிப்பணமும் நமக்கான நலத்திட்டங்களுக்கு இல்லை, நம் வளங்களும் நம்முடைய நலன்களுக்காக இல்லை. நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த இந்த மத்திய, மாநில ஓட்டுப்பொறுக்கிகள், அதிகாரிகள், நீதிமன்றம், ஊடகம் னைவரும் கூட்டுக் களவானிகளாக இந்த நாட்டின் மனித வளம், மண் வளம் அனைத்தையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுத்து கொத்தடிமைகளாய் மாற்றி ஈவிரக்கமின்றி சுரண்டி அவர்கள் லாபம் பார்க்கவே ஒவ்வொரு பன்னாட்டு கம்பெனியும் வரவழைக்கப்படுகிறது (MNC) . இந்த அரசால் இனி எதையும் காப்பாற்ற முடியாது. நம் மக்களையோ, வளத்தையோ ஒப்பந்தத்தின் பெயரால் எழுதிக் கொடுப்பதைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு அமெரிக்காவால் கட்டளையிடப்படவில்லை. அனைத்தையும் எழுதிக்கொடுக்கும் வரை இலவச கலர் T.V., 1ரூ அரிசி எதையாவது கணக்கு காட்டிகினு இருப்பாங்க. கடைசியில் ஒரு வழியும் இல்லையென கைவிரித்துவிடும் வரை நமக்கு தன்மானமோ, சுய அறிவோ இல்லையெனில் நம்மை காப்பாற்ற போவது யாரும் இல்லை.

சமீபத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளின் மாமா .சிதம்பரம் டெல்லிக்கு போக சென்னை விமான நிலையத்துக்கு வர, விமானம் 10 நிமிடம் தாமதம். அதற்குள் அனைத்து மத்திய மாநில ஊடகங்களிலும் தவிப்பு தவிப்பு என தலைப்பு செய்தியிலிருந்து ஒரே புலம்பல். ஆனால் நகர வாழ்க்கையின் அங்கமாகிப்போன போக்குவரத்து நெரிசல் மக்களுக்கு பழகிக்கொள்ள, சகஜமாக்கி கொள்ள வேண்டிய விஷயமா? மருத்துவர்,பொறியாளர்,கசக்கி பிழியப்படும் உழைக்கும் மக்கள் என மனித சமூகத்தின் கூறுகள் அனைத்தும் மணிக்கணக்கில் வீணாகிக் கொண்டிருப்பது நியாயமா? என எந்த ஒரு ஊடகத்திலும் FLASH NEWS-ஆகக் கூட போடப் படுவதில்லை. அது போதாது என ஒரு FM-ல் டென்ஷன் வேண்டாம், கோவம் வேண்டாம், கூலா நம்ம பாட்ட கேட்டுகினே பொறுமை வீடு போய் சேரச் சொல்லி அறிவுரை வேறு. மிகவும் நியாயமான உணர்வு கூட மழுங்கடிக்கப்படுகிறதே, அதை உணரமுடியவில்லையா?
விவசாய நாட்டில் இருப்பவர்களுக்கு கூட சோறு போட வக்கில்லாத அரசு ஏற்றுமதிக்கு உற்பத்தி செய்ய சொல்லியும், பண்டைய ரோமாபுரியில் மன்னர்கள், பணக்காரர்களுக்கு பொழுதுபோக அடிமைகளை ஆயுதங்களோடு மோதிக்கொள்ள சொல்வார்களே அது போல நாகரீக வளர்ச்சியில் இங்கு அவர்களை விட அறிவில் தாழ்ந்த, அடிமைப்புத்தி உள்ளவர்களை ஏலமுறையில் கூலிக்கு வாங்கப்பட்டு நடத்தப்படும் கிரிக்கெட் எனப்படும் போதையில் இருக்க வைத்தும், எந்த துறையை தனியார்மயமாக்கினாலும் டாஸ்மார்க்-கை அரசே லாபகரமாக நடத்தியும், எல்லா பிரச்சனைகளுக்கும் தனிமனிதன் மூலமே தீர்ப்பு சொல்லும் நாட்டாமைகள் நிறைந்த சினிமாகழிசடைகளையும் வைத்து மட்டுமே அந்நிய செலாவணிகளை பெருக்கி நாட்டை முன்னேற்றிவிடலாம் என்ற கதையளக்கும் முட்டாள் கோமாளி அரசியல்வாதிகளும், கூத்தாடிகளுமே நம் இளைஞர்கள் மனதை கவர்ந்து இழுக்கிறார்கள். கழுத்தை பிடிக்கும் நெருக்கடி வந்தாலும் கடவுளை நம்பிக்கொண்டு காலம் தள்ளும் பலருக்கும், அந்த கடவுளே காணாமப் போன வழக்கும் அவரது உண்டியல் காணமல் போன வழக்கும் நிலுவையில இருப்பது தெரியவில்லையே ஏன்?. மனு கொடுத்தும் எந்தப்பிரச்சனையும் தீரப்போவதில்லை. இருந்தாலும் அத கொடுக்கிறதுக்கு கூட நம்மை சந்திக்க வராத அதிகாரிகளும், ஓட்டுப்பொறுக்கிகளும், சினிமா கழிசடைகளுக்கும் செல்வச் சீமான்களுக்கும் பல்லை காட்டிக்கொண்டு காத்துக் கிடக்கிறார்கள். சீக்கியர் படுகொலையிலும், போபால் விஷவாயு நிவாரணத்திலும், நர்மதா அணை நிவாரணத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மனு கொடுத்தால் தீராது என்பதை அறிந்து அந்த மக்கள் தங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு சொல்கிறது. செத்தாலும் மனு கொடுத்து சாகனுமாம், போராடி செத்தால் அவன் தீவிரவாதியாம்.

களத்தில் போராட மறுக்கும் கணத்திலிருந்து எதுவும் நமக்கு சொந்தமில்லை. நம் வரிப்பணமும், வளங்களும் நமக்காக இல்லாமல் ஓட்டுப்பொறுக்கிகளின் வீண் பாதுகாப்பு, தரகு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் பாதுகாப்பான கொள்ளை லாபத்திற்கும் தாரை வார்க்கப்படும் போது உள்நாட்டு பொருளாதாரம் எப்படி வலுவாக இருக்கும். எஞ்சியுள்ள நம் மக்களின் சொற்ப வாழ்வினை காரணம் காட்டி மேலும் மேலும் உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IMF) இவற்றிடமிருந்து கந்து வட்டி போல கடன் வாங்கப்படுகிறது. விவசாயத்தை சார்ந்த நாடாக இருப்பதினால் அதை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்ற மண்வளத்தையும், மனிதவளத்தையும் பயன்படுத்தி தேசத்தை வளப்படுத்தாமல் இப்படி அனைத்தையும் தவணை முறையில் எழுதிக் கொடுத்துவிட்டு பிறகு கடன் வாங்கி ஆயுதம் குவித்துக்கொண்டு இருக்கிறார்களே, ஏன்?. அஹிம்சை பேசும் அமைதி நாடாம் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பசியால் இறந்து கொண்டிருப்பதும், கடந்த பத்தாண்டில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதுமே 70 விழுக்காடு விவசாய மக்கள் வாழும் 63 ஆண்டு சுதந்திரத்தின் சாதனை. இப்படியே போனால் ஒரு கட்டத்தில் நம் உள்ளூர் வங்கிகள் நம்மை என்ன செய்யுமோ அதையே தான் WB மற்றும் IMF-இடம் இந்தியா மொத்தமாக அடிமையாகிவிடும். ஆனால் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளர்ந்தால் அது முதலீடுகளுக்கான சூழலை (தரகு மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்கள்) பாதிக்கும் என்பதே உலகவங்கியின் மாமா மன்மோகன்சிங்கின் கவலையாக இருக்கிறது. நாடு அடிமையாவதை விட ஒருசில முதலாளிகளின் நலன் பாதிக்குமே என்பதில் தான் இவர்கள் கவலைப்படுகிறார்கள். எனவே அரசமரியாதையோடு, பாதுகாப்போடு வளங்களை சுரண்டிக்கொள்ள அந்நியனுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து தாய்நாட்டைக் கூட்டிக்கொடுக்கும் மாமா வேலையை அதிகாரிகளும், ஓட்டுப்பொறுக்கிகளும் செய்வதால் உண்மையில் தேசத்தை, மக்களை நேசிப்பவர்கள் சும்மா இருப்பார்களா? சுரணையின்றி இருப்பார்களா? வளர்ச்சி எனும் மோசடியில் இவர்கள் தொந்தி வளர்க்க கோடிக்கணக்கில் கடன் வாங்குவதை இனியும் பொறுப்பார்களா? சுரண்டலே அமைப்பாய் உருவான சமூகத்தில் அது தவறு என்பது உறைக்காத வரை, வரைமுறையின்றி நெடுங்காலமாய் சுரண்டப்பட்ட அந்த மக்களை, அவர்களின் போராட்டத்தை புரிந்து கொள்வது கடினம். அங்கே பசியும் பட்டினியும் தவிர எதையுமே அறியாத மக்களே தங்கள் வாழ்வின் ஆதாரமாய் உள்ள பூமியை தக்கவைக்க போராடுகிறார்கள். அரசால் ஒதுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட மக்கள், போலீஸ் மற்றும் வனத்துறையினரால் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டவர்கள் சிறிதேனும் தங்கள் கண்ணியத்தை மீளப்பெற்றனர் என்றால் அது அவர்கள் தோளோடு தோள் நின்ற மாவோயிஸ்டுகளால்தான். பன்னாட்டு கம்பெனிகளின் இந்த கொள்ளை வெறிக்காக பழங்குடியின மக்களும், பன்னாட்டு கப்பல் கம்பெனிகளின் எல்லை தாண்டிய உரிமைக்கு மீனவர்களும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயிகளும் தங்களுக்கு எதிராக நடத்தப்படும் போரை எதிர்த்து போராட துவங்கிவிட்டனர். இன்று அவர்களுக்கு என்னவோ அதுவே அவர்களை சார்ந்து வாழும் நமக்கும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். எனவே மிகவும் நியாயமான அந்த மக்களின் போராட்டத்திற்கு நம் ஆதரவை மக்களிடம் கொண்டுசெல்வதோடு, எண்ணிலடாங்கா நம் துயரங்களுக்கும் போராட்டமே தீர்வு என்பதையும் புரிந்து கொண்டு புரட்சிகர அணிகளின் பின்செயல்படாமல் நமக்கான விடியல் நாளை இல்லை.

செவ்வாய், ஜனவரி 26, 2010

காட்டு வேட்டை எனும் உள்நாட்டுப் போர்

மாவோயிஸ்டு, நக்சல் ஒழிப்புப் போரென கொக்கறிக்கும் அரசின் பயங்கரவாதம் தொடுத்திருப்பது உண்மையில் ஏழை மக்களுக்கெதிரான ஓர் உள்நாட்டுப் போர். ஆனால் மாமா மன்மோகன்சிங்கும், மாமா ப.சிதம்பரமும் இது உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான போர் என்று ஓயாமல் சொல்வதோடு அத்தனை ஊடகங்களும் அரசின் அறிக்கையாய் இதே பல்லவியே பாடிக்கொண்டிருக்கின்றன. இதில் யார் சொல்வதில் உண்மை என்பதில் சந்தேகம் எழலாம். உண்மையை இரண்டு விதமாக பேசுவதால், யாருக்கான நன்மையை யார் பேசுகிறார்கள் என்று அறிவது மிக அவசியமாகிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கி உள்ள அம்மக்களை அரசியலின் பெயராலும் முடக்கி ஒழிக்கவே இந்தப்போர். முதலில் அமைதியை நிலைநாட்டி பின் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப் போவதாக சொல்லியிருக்கும் இந்திய அரசு, கடந்த கால கட்டங்களில் தன் இராணுவத்தின் மூலம் எந்த மாதிரியான அமைதியை நிலைநாட்டியது என்பதற்கு காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், வடகிழக்கு மாநிலங்கள், ஈழத்து மக்களிடம் போய் கேளுங்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றிற்கு எதிராக பாதுகாப்பு என்ற பேரில் காஷ்மீரில் 7 லட்சம் துருப்புகள், வடகிழக்கு மாநிலங்களில் 2 லட்சம் துருப்புகளையும் வைத்துக்கொண்டு எத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள், சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள், எத்தனை பெண்கள் வண்புணர்ச்சி செய்யப்பட்டார்களோ அதுவே இவர்களது அமைதி நடவடிக்கையின் சாதனை. இந்த கொடுமைகளுக்கு எதிராக அந்தந்த மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் போராட்டத்தை திட்டமிட்டே ஊடகம் அனைத்தும் மறைத்தாலும் உண்மை என்றும் மறைவதில்லை. மணிப்பூரிலும் அப்படி ஒரு வீரப்பெண் ஐரோம் ஷர்மிளாவின் அரசின் அடக்குமுறைக்கெதிரான உண்ணாநிலை போராட்டம் 8 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது(இந்திய ஓட்டுப்பொறுக்கிகளின் உண்ணாநிலை நாடகம் போல அல்ல). அப்படியே அஸ்ஸாமிலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும் தங்களின் கலாச்சாரம், மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதரம் எல்லாம் பிடுங்கப்பட்டதாலேயே சுயநிர்ணய உரிமைக்காக போராடும் மக்களை இந்திய தேசியத்தில் குதித்து போதை ஏற போதிக்கிறது தேசபக்தி பேசும் அறிவுஜீவிகளின் முட்டாள்தனமான அறிவுரைகள்.

மேற்குவங்கம் தொடங்கி ஆந்திரம் வரை ஏவிவிடப்பட்டுள்ள இந்த உள்நாட்டுப்போரில் சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஒரிசாவில் காடுகள், மலைகள், நதிகளென செழித்த பகுதியில் எந்த அடிப்படை வசதியும் பெறாத, கேள்விப்படாத பழங்குடி இன மக்களின் வளர்ச்சி திட்டங்களை தடுப்பதாகக்கூறி அரசு கடந்த வருட கடைசியில் ஆரம்பித்திருக்கும் இந்தக் காட்டு வேட்டை (Green Hunt) அங்குள்ள ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளை ஒழிக்க அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் சொல்லும் சனநாயக வழிமுறைகளை மறுப்பதோடு, சட்டத்திற்கு புறம்பாக ஆயுதம் வைத்து உள்நாட்டுப்பாதுகாப்பை அச்சுறுத்தி வருகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு உண்மையா? என்றால் துளியும் உண்மை இல்லை. மக்கள் நலனுக்காகவே போராடும் மாவோயிஸ்டுகள் 60-களில் நக்சல்பரி எழுச்சியின்போதே கொண்ட நோக்கத்திற்காக செயல்படுகிறார்கள். தவிர இவர்கள் சொல்வது போலான மாவோயிஸ்டுகளின் போராட்டம் நேற்றோ அதற்கு சில மாத, வருடத்திற்கு முன்போ துவங்கியதல்ல. இவர்களின் இப்போதைய நலத்திட்டங்களுக்கு மவோயிஸ்டுகள் தடையாய் இருக்கிறார்கள் என்றால் பின் தங்கிய அம்மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய இதுநாள் வரை தடுத்தது எது? அல்லது 60 வருடமாக இவர்கள் சொல்லும் சுதந்திர இந்தியாவில் இதுவரை மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை வெளியிட முடியுமா? அல்லது இனிமேலான நலத்திட்டத்தில் மக்களும், நாடும், முதலாளிகளும்(தரகு, பன்னாட்டு) அடையப்போவதை வரையறுக்க முடியுமா? முடியாது. சொன்னால் உண்மையை மக்கள் அறிவார்கள். அதனால் தான் போராடும் அம்மக்களையும் அதற்கு துணை நிற்கும் போராளிகளையும் பயங்கரவாதத்தின் பெயரால், தீவிரவாத்தின் பெயரால் உலகம் முழுதும் ஒரு பொதுக்கருத்தை பரப்பி எதிர்ப்பின்றி கொன்றுவருகிறார்கள். அதனால் நண்பர்களே இந்த பொதுக்கருத்தின் குறுகிய வட்டத்தில் இல்லாது வெளியே வந்து சிந்தியுங்கள். தகவல் அறியும் உரிமையின் கீழ் இதுவரை அப்பாவிகள் யாரையும் கொல்லவில்லை என்னும் உண்மையும் தெரியவருகிறது. தண்டகாரண்யா, நியமகிரி மலைகளைச் சுற்றியுள்ள மக்கள் அடிப்படை வசதிகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், சாலை, மின்வசதி ஏதுமின்றி இருக்கும் அற்ப வாழ்வையும் பறிக்கும்போது தான் அரசை நேரடியாக சந்திக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் பன்னாட்டு நிறுவனங்களுடன் 100 ஒப்பந்தம் கையெழுத்தானது. எதற்கும் வராத அரசு பன்னாட்டு நிறுவனத்தின் கைக்கூலியாய், அவன் நலனுக்காய் அந்த மலையை பிடுங்கிக் கொடுக்க துடிக்கிறது. தண்டகாரண்யா, நியமகிரி மலைகளில் புதைந்திருக்கும் பலலட்சம் கோடி மதிப்பிலான இயற்கை வளங்களை பிரிட்டீஷின் வேதாந்தா நிறுவனம் உட்பட பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்நாட்டு வளத்தை எழுதிக்கொடுக்கவும், அதற்கு தடையாய் உள்ள மக்களை அழிக்கவும் மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூ.7300 கோடி.

மும்பை தாக்குதலில் பணக்காரர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் பதறிய அரசு சிறப்பு கமேண்டோ-களை அனுப்பியதையும், அவர்கள் மீட்கப்பட்டதையும் நேரடியாக ஓளிபரப்பி தேசபக்தி பீதியூட்டிய ஊடகங்களை கொஞ்சம் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க முடியுமா? முடியாது. ஏன் என்றால் இங்கு அத்துமீறி இருப்பது இந்திய அரசே. அம்மண்ணில் உள்ள மொத்த மக்களையும் வெளியேற்றிவிட்டு நலத்திட்டங்கள் நிறைவேற்றப் போவதாகச் சொல்லும் இந்திய அரசு அது யாருக்கானது என்பதை சொல்லாமல் விட்டாலும் நாம் புரிந்து கொள்ளதான் வேண்டும். ஜனநாயக வழிமுறையை மாவோயிஸ்டுகளைப் பின்பற்றச் சொல்லும் மாமா ப.சிதம்பரம், சட்டீஸ்கரில் ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரசின் ஆயுதமேந்திய கூலிப்படையான சல்வாஜுடுமும் நக்சல் போராளிகளை ஒழிக்க கூட்டுச் சேர்ந்துள்ளதைப்பற்றி மட்டும் பேச மறுக்கிறார். எல்லாம் அமெரிக்க ஆண்டையின் செயல்.

இயற்கையின் வளத்தை சுரண்டவும், மக்களின் உழைப்பை சுரண்டவும் அந்நிய மூலதனத்தை அழைத்து வரும் கேடுகெட்ட அரசியலும், முதலாளித்துவமும் இன்னும் எவ்வளவு சுரண்டினால் நாம் உணரப்போகிறோம். வரலாற்றில் இதுவரை கடந்ததை நாம் ஆராய்ந்தோம் என்றால் தெரியும். மத்தியபிரதேசத்தில் என்ரான் எனும் அமெரிக்க நிறுவனத்துக்கு மாநில மின் துறையை தூக்கி கொடுத்தனர், துறையை மொத்தமாக திவாலாக்கிவிட்டு அது தன் ஊர் போய் சேர்ந்தது. போபால் Union Carbide அமெரிக்க நிறுவனத்தில் நடந்த விஷவாயு கசிவு 26 வருடத்திற்குப் பிறகு இன்றும் அங்கு குழந்தைகள் குறைபாட்டோடு பிறப்பதோடு, பலருக்கும் விபத்துக்கான நஷ்டஈடு கொடுக்கப்படவில்லை. அடிப்படை தேவை கூட இல்லாமல் நாளும் நம்மை கொல்லும் அரசுக்கு, நாம் செலுத்தும் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு (TATA, Birla, Reliance, Mittal, etc..) வரிச்ச்லுகை கொடுக்கவே போதாமல், பாவம் மலை, நதிகளை எல்லாம் விற்று வாழவைக்கிறார்கள் என்றால் நமக்கு ஏன் இந்த அரசு எனும் கேள்வியில் நியாயம் இல்லை என்றா சொல்வீர்கள். எல்லாம் தனியாருக்கு எனும் சொல்லில் இந்த அரசு போய்கொண்டிருக்கும் போது அதில் நிலம், நீர், காற்று அனைத்தும் அடங்கிவிட்டது. செத்தாலும் போராட்டம் தவறு என்பவர்கள், நேர்மை, சமரசமற்ற அரசியல் எனும் நக்சல் தலைமையிலான போராட்டத்தை பொறுக்க முடியாமல் இந்த உள்நாட்டுப்போரை அமெரிக்க தொழில்நுட்பமும், ஆயுதமும் வழிநடத்துகிறது. உலகமகா உயிர்கொல்லி ஆயுதத்தை ஈராக் வைத்துள்ளாதாகக்கூறி பயங்கர ஆயுதங்களோடு முன்வாசல் வழி வந்த எண்ணெய்த் திருடன் அமெரிக்கா வந்த வேலை முடிந்ததும் பின் வாசல் வழி எத்தனிக்கும் போதும் உலகம் புரிந்து கொள்ளாததை ஈராக் மக்கள் இழப்புகள் தாண்டி அமெரிக்க படைகளுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் அப்படியே, இந்த வளங்களை கொள்ளையிட அரசு இதுவரை 1,50,000 ஹெக்டேர் நிலங்களை தனியாருக்கு சிறப்பு பொருளாதார மண்டலம்(Special Econamoc Zone) எனும் பெயரில் சீர் கொடுத்துள்ளது. இங்கு நாம் போராடி பெற்ற எந்த இந்திய சட்டமும் செல்லாது. இன்னும் இது போன்ற லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களை பிடுங்கி கொடுக்க இருக்கிறது. எல்லாவறிற்கும் காரணமான இந்த அதிகாரிகள், அரசியல், பொறுக்கிகளே அரசியல் தலைவர்கள், அடிமைப்புத்தி உள்ளவர்கள் தங்களோடு சேர்த்து இந்த நாட்டு மக்களும் அடிமைகள் என்று ஒப்பந்தம் எழுதிக்கொடுக்க எவ்வளவு திமிர் இருக்க வேண்டும். இதை தட்டிக்கேட்க தகுதி கொண்ட பத்திரிக்கைகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் எல்லாம் இவர்களுடன் கூட்டுக் களவானிகளாக இருக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை உணரவேண்டும்.

300 வருடத்திற்கு முன் துரோகமே உருவான அரசர்களும், வியாபாரிகளும், நிலப்பிரபுக்களும் சேர்ந்த சிறு சதிகாரக்கும்பல் இந்தியத்துணைக் கண்டத்தை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்துக்கு விற்றது ! அச்சதிகார கும்பலின் இன்றைய வாரிசுகள், இந்தியாவை பல நாடுகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆம், நாடு அடிமையாகிக் கொண்டிருக்கிறது. 3 கோடி மக்கள் பட்டினியிலும், 20 கோடி மக்கள் அரைப்பட்டினியிலும், 35 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைவாகவும் இருக்கும் போது பெற்ற விளைச்சலை பதுக்கி வைத்து காய்ந்த வயிரின் மீதும் ஆன்லைனில் சூது விளையாடி பங்குசந்தை உயர்வில் பெருமை பேசும் நாட்டில் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, அண்மையில் தேர்தல் ஆணைய வைர விழா போன்ற கேலிக் கூத்துகளும், அவற்றிற்கு ஆகும் செலவுகளும் அவசியம் தானா? விலைவாசி, கல்வி, மருத்துவம், சுகாதாரம் எல்லாம் காசு இருந்தால் மட்டும் என்று திட்டமிட்டு அரசு அனைவரையும் புறக்கணிக்கும்போது சுயநிர்ணய உரிமையை விட , முலதனத்திற்கு எதிரான போர் மிக அவசியமாகிவிட்ட நிலையில் பொது எதிரியை வீழ்த்த பாதிக்கப்பட்ட மக்கள் மொழி, இனம், மதம், கடந்து ஒன்றுசேர வேண்டும். முதலாளித்துவம் மெல்ல தன் சாவை நோக்கி வேகமாய் நகரும் நிலையிலும், புதிய பொருளாதாரக் கொள்கைகளோடு எல்லை கடந்த சுரண்டலில் இறங்கி மேலும் மேலும் கொழுப்பதோடு, வறுமையில் பெரும்பான்மை மக்களை தள்ளிவிடுகிறது. மேலும் திருட, திருடியதை பாதுகாக்க, அரசின் அடக்குமுறை பல்வேறு வடிவங்களில் வெளியே தெரிகிறது. இதை உணர்ந்து இந்த வர்க்க உணர்வுள்ள மக்கள் ஒன்று திரண்டு போரட வேண்டும். வர்க்க முரண்பாடுகளை மழுங்கடிக்க நினைக்கிற அதே வேளையில் தன்னையறியாமல் உழைக்கும் மக்களிடையே தேவைப்படும் ஒற்றுமையை இது மேலும் வலுப்படுத்தவில்லையா! போராடும் மக்களின் நியாயமும், நம் போராட்டம் துவக்க வேண்டியதன் நியாயமும் புலப்படவில்லையா? தாமதிக்காமல், சமரசமின்றி போராடும் போராளிகளின் பின் அணி திரளுங்கள்.

சனி, டிசம்பர் 26, 2009

"கிரீன் ஹன்ட்" உண்மை: நக்சல் ஒழிப்புப் போரா? (அ) மக்கள் அழிப்புப் போரா?

பழங்குடிகள்-மீனவர்கள்
விவசாயிகள் மீதான போர்தான்
அரசு தொடுத்துள்ள
நக்சல் ஒழிப்புப் போர்!

நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்! மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்:
பிப்ரவரி 20, 2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மாவோயிஸ்ட் கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. இந்தப் போரின் பெயர் – ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ (காட்டு வேட்டை). சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி. ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும் விமானப்படைப் படைத்தளமும் அங்கே விரைந்து உருவாக்கப்படுகின்றன. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சி.ஆர்.பி.எஃப், கோப்ரா, சி-60, கிரேஹவுன்ஸ், இந்திய திபெத் எல்லைப்படை, நக்சல் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப்படைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திய இராணுவ ஹெலிக்காப்ட்டர்களும், அமெரிக்க இராணுவ செயற்கை கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன. இந்திய இராணுவ அதிகாரிகள் போரை வழி நடத்துகிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீக குடிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போருக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூபாய் ஏழாயிரத்து முன்னூறு (7300) கோடி.

மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக ஏற்கெனவே சட்டிஸ்கர் அரசு உருவாக்கியிருக்கும் சல்வார்ஜூடும் என்ற கூலிப்படை, கடந்த 4 ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து 3 லட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது. 50,000 பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஆப்ரேசன் கிரீன்ஹன்ட்-இன் விளைவாக மேலும் பல ஆயிரம் பழங்குடி மக்கள் காடுகளை துறந்து ஓடுகிறார்கள். "இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர் தான் எங்களுக்கு வழிகாட்டி" என்று வக்கிரமாக பிரகடணம் செய்திருக்கிறார் சட்டிஸ்கர் மாநில டி.ஜி..பி விசுவரஞ்சன்.

இந்த போர் வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இது தான். தண்டகாரண்யாவின் காடுகளிலும், மலைகளிலும் அற்புதமான அறிய கனி வளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்பு கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிக்கா, குவார்ட்சைட் போன்ற இருபத்துஎட்டு வகை கனி வளங்களும், காட்டு வளங்களும், நீர் வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியத்தரகு முதலாளிகளும் விருப்பம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள மாவோயிஸ்டு கொரில்லாக்கள். சிதம்பரத்தின் கொலை வெறிக்கு காரணம் இது தான் !

ஆம். தண்டகாரண்யாவின் காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்குத் தெரியாமலேயே அறுத்துக் கூறுகட்டி விற்றுவிட்டது அரசு. வேதாந்தா (ஸ்டெர்லெயிட் கம்பெனியின் தாய் நிறுவனம்) என்ற பிரிட்டீஷ் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு 40 கிலோ மீட்டர் நீளமுள்ள நியமகிரி மலையை தாரை வார்த்திருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய் (20 மில்லியன் கோடி) இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் 7%!! இந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16%, இரும்புத்தாதுவில் 20% சட்டிஸ்கர் மாநிலத்தின் 4 மாவட்டத்தில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாட்டா, எஸ்ஸார், ஜிண்டால் போன்ற தரகு முதலாளிகளுக்கு கிரயம் எழுதித் தந்துவிட்டது அம்மாநில அரசு. இரும்புத்தாதுவின் இன்றைய உலகச்சந்தை விலை டன்னுக்கு 210 டாலர் (சுமார் 10,000 ரூபாய்). இம்முதலாளிகள் அரசுக்குத்தரவிருக்கும் விலை- டன்னுக்கு 27 ரூபாய். இவை போல ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் !

பழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. சின்னஞ்சிறிய ஜார்கண்டு மாநிலத்தில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலங்கள் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறி விட்டது. இங்கிருந்து மட்டும் 10,00,000 லட்சம் பழங்குடி மக்களும், விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். டாட்டா, பிர்லா, ஜிண்டால், எஸ்ஸார், மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும் வேதாந்தா, போஸ்கோ, ஹோல்சிம், லபார்க், ரியோடிண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளை போல வட்டமிடுகிறார்கள்.

பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ, டாட்டா, வேதாந்தா, மிட்டல், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஜிண்டால் என ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள். அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டிமுடித்துவிட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை. கோபால்பூரில் டாட்டா-வின் இரும்பு ஆலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கமும் பிளாட்டினமும் எடுக்க வந்த ஜிண்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை. இவையெல்லாம் மாவோயிஸ்டு ஆயுதக்குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல, தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போர் உண்மையில் மக்களுக்கு எதிரான போர்.

"நமது நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், அது முதலீட்டுச் சூழலை பெரிதும் பாதிக்கும்." என்று இந்தப் போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன்சிங். டாட்டா, அம்பானி, மிட்டல் போன்ற தரகுமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும் அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன்சிங் கூறும் செய்தி. இந்தப் போர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, மக்களுக்கு எதிரான போராகும்.

காடு என்பது பழங்குடி மக்களின் உரிமை. கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக, அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. கடல் மீனவர்களின் உரிமை. பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள் மீன்வளத்தை அள்ளுவதற்காக, மீனவர்களுக்கு கடலில் எல்லைக்கோடு போடப்படுகிறது. மீறினால் ‘காட்டு வேட்டை’ போல, ‘கடல் வேட்டை’ ஒன்றை இந்த அரசு அறிவிக்கும். விதை என்பது விவசாயிகளின் மரபுரிமை. ஆனால் அதனைப் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு. இனி தமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமை கோரினால் போலீசு அவர்கள் மீது வழக்கு தொடுக்கும். மீறினால் போர் தொடுக்கும்.

பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மட்டுமல்ல, பரந்து பட்ட மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த ‘முதலீட்டு சூழலை’ உருவாக்குவதற்குத்தான் ஒரிசாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதே தென்கொரிய ஹூண்டாயின் ‘முதலீட்டுச் சூழலைப்’ பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். பன்னாட்டு கம்பெனிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்தபட்ச ஊதியம் முதல் பணி நிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பறிக்கப்படுகின்றன. கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவதற்காக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச் சூழலுக்காக அரசின் இலவச மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.

இந்தப் போர்க்களம் தண்டகாரண்யாவின் காடுகளைத் தாண்டி நாடு முழுவதும் வியாபித்திருக்கிறது. போரின் வடிவங்கள் மட்டுமே இடத்திற்கேற்ப மாறுகின்றன. ஆனால் போரின் நோக்கம்-நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறுகாலனியாதிக்கம்.

இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகள் அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன. கொள்ளையின் ஆதாயங்களை பங்கு போட்டுக்கொள்வதற்கு மட்டுமே அவை தமக்குள் மோதிக் கொள்கின்றன.

"1994-ல் காட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தனியார்மயக் கொள்கைகளிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவியதில்லை" என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டு முதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன்சிங்.

ஆம். மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாக, பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக, காண்டிராக்டர்களாக, பங்குதார்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடிசுவரர்களின் மன்றமாகியிருக்கிறது நாடாளுமன்றம். அதிகாரிகளும், நீதிபதிகளும் பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டார்கள்.

சீரழிந்து நாறிக்கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, தன்னலனைத் துறந்தவர்களாக, இலஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் பல்லிளிக்காதவர்களாக, இழப்புக்கும் தியாகத்திற்கும் அஞ்சாதவர்களாக - நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மட்டும்தான். ஓட்டுக்கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்து வரும் சூழலில், மறுகாலனியாக்கத் தாக்குதல்களின் தீவிரம், மக்களை நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.

எனவேதான், "நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்" என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன்சிங். அத்வானி முதல் புத்ததேவ் வரை அனைவரும் அதனை வழிமொழிகிறார்கள். தங்களுடைய எதிரிகள் யார் என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்து விட்டன.

அதே நேரத்தில் தமது நண்பர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடாமல், ஓட்டுக்கு லஞ்சம், இலவசத் திட்டங்கள், போன்ற ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இந்த ஓட்டு வேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால், உடனே ‘காட்டு வேட்டை’ தொடங்குகிறது.

மாவோயிஸ்டுகளின் ஆயுதப்போராட்டம் நடத்துவதனால்தான் அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய். அடுக்கடுக்காகத் தொடுக்கப்படும் மறுகாலனியாதிக்கத் தாக்குதல்களால் வாழ்க்கைப் பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எதிர்த்துக்கேட்டால் ஒடுக்கப்பட்டு, கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள். இதை அரசு அறிந்தே இருக்கிறது. இந்த வெடியின் திரியும் அதனைப் பற்றவைக்கும் பொறியும் நக்சல்பாரிகள் தான் என்ற உண்மையும் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக் கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது. மறுகாலனியாதிக்க எதிர்ப்பின் கூர்முனையை நக்சல்பாரி இயக்கத்தை முறிக்க முயல்கிறது. ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ என்ற நக்சல் வேட்டையின் நோக்கம் இதுதான்.
  • நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
  • பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!
  • போராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

தொடர்புக்கு:
அ.முகுந்தன், 110, 2-வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. கைபேசி: 9444834519.






செவ்வாய், டிசம்பர் 01, 2009

போலிகளும், காலிகளும் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍: ஒரு கேலிக்கூத்து

மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட பந்த்தில் வன்முறை வெடித்தது. பேருந்து, தொடர்வண்டிகள் மறிக்கப்பட்டதோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


63 ஆண்டுகளாகும் சுதந்திர இந்தியா என்று சொல்லப்படும் போலி ஜனநாயக நாட்டில் நாடாளுமன்ற முறையிலேயே மக்களை வென்று புர்ரட்சி செய்து சோவியத்தை அமைப்போம் எனும் போலி கம்யூனிஸ்டுகள் தாங்கள் பல ஆண்டுகளாய் ஆளும் மேற்குவங்கம், திரிபுரா, கேரளத்தில் எந்த இலட்சனத்தில் ஆட்சி செய்கின்றனர், மக்களைத் திரட்டினர் என்பதெல்லாம் உலகறிய வெட்ட வெளிச்சமாகிறது. கம்யூனிஸ்ட் பேரில் உள்ள போலிகள் மத்தியில் காங்கிரசுக்கும், மாநிலத்தில் திராவிட கட்சிகளுக்கும் கூஜா தூக்கி, அவர்கள் காலை நக்கி, அந்தந்த கட்சிகளின் துணை அலுவலகம் போலவே செயல்படுவதோடு சொந்த நிலைப்பாடு ஏதுமின்றி பிழைப்பு நடத்துகின்றனர். சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகளே அதற்கு நல்ல உதாரணம். அதோடு விவசாயி, தொழிலாளிக்கு ஆதரவாய் இருப்பதாய் தன்னைக் காட்டிக் கொண்டு இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான மக்களை சங்கம் எனும் பேரில் ஒன்றுசேர்த்து அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து, அடிப்படை உரிமையும், உலக அறிவையும் பெறாவண்ணம் காயடித்ததோடு, சிங்கூர், நந்திகிராமில் விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாய் பிடுங்கி முதலாளிகளுக்கு தன் விசுவாசம் காட்டமுனைந்தபோது மக்களின் எதிர்ப்புக்கு உள்ளானதும், எந்த அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் லால்கரில் மக்கள் போராடியதும் திட்டமிட்டே மறைக்கப் படுவதோடு அரசு மற்றும் முதலாளித்துவ ஊடகங்களால் மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டும் போராட்டங்கள் திரித்துக் கூறப்பட்டன. முதலாளித்துவ ஊடகங்களின் செய்திகளே அதிகாரப்பூர்வ செய்தி தளங்களாகி வருவதால் பெரும்பான்மை மக்களும் இந்த கருத்துக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

நாட்டின் சுயசார்புத்தன்மை எந்தத்துறையிலும் வந்துவிடா வண்ணம் அரசு முழுக்கவும் அமெரிக்க கைக்கூலியான பிறகு கல்வி, விவசாயம், தொழில்வளம், மருத்துவம் என அனைத்து துறைகளும் அரசு தன்னை கை கழுவிக் கொண்டு தனியார் மயமாகி மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுப் போவதோடு எண்ணிலடங்கா துயரத்தையும் மக்கள் நாளும் அனுபவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியே உற்பத்தி குறைவு, ஊக வணிகம், விலைவாசி உயர்வும். இந்த பிரச்சனை நாட்டின் அனைத்து பகுதிகளை விடவும் போலி கம்யூனிஸ்ட் புர்ரட்சியாளர்கள் ஆளும் மாநிலங்களில் அதிக அளவு மக்களை கசக்கிப்பிழிவதோடு, இவர்களின் மாட்சிமை தாங்கிய ஆட்சியையும் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது என்றால் அதே நேரத்தில் இவர்கள் ஆட்சியின் கையறு நிலையால் மக்களுக்கு துரோகம் இழைத்தது, கம்யூனிசத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்தியதோடு, இந்தியாவின் நாஜிக் கட்சியான பா.ஜ.க-வையும் அம்மண்ணில் வேரூன்றச் செய்துள்ளது. அது இப்போது வளர்ந்து போலி கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான ஒரு பந்த்தை வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கின்றது என்றால் அதுவே 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே ஆட்சி செய்யும் போலி கம்யூனிஸ்டுகளின் சாதனை. எப்போதும் குறையே சொன்னால் தகுமா? பா.ஜ.க-வால் நல்லது நடந்தால் வரவேற்பது தானே என்று நீங்கள் யோசிக்கலாம். மாநிலத்தின் மின் உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த பந்த்தில் ஏராளமான பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ள்ன.

ஆனால் இந்த யோக்கிய சிகாமனிகள் மகாராஷ்டிராவில் நடத்திய கடந்த ஆட்சியில் மின் துறையை தனியார் மயமாக்கி அமெரிக்காவின் என்ரான் நிறுவனத்துக்கு தாரைவார்த்தபோது அந்தத் துறையையே திவாலாக்கி, மக்களை ஏமாற்றி, பட்டை நாமத்தை சாத்தி பல ஆயிரம் கோடி ஊழல் செய்ததோடு இன்றும் அதற்கான நட்டஈடு கணக்கில் குறிப்பிட்ட அளவு கொடுக்கப்பட்டும் வருகிறது. உழைக்கும் மக்களான நம்முடைய வரிப்பணத்தில் தான் இந்த அரசே இயங்குகிறது. நமக்கான எந்த ஒரு அடிப்படை தேவை கூட இன்னும் நிறைவேறாத நிலையில், மீண்டும் மீண்டும் நம் வரிப்பணமும், இந்த அரசும் இம்மியும் நமக்குப் பயன் இல்லாமல் நட்டஈடு என்ற பெயரில் அவர்களுக்கு(அமெரிக்க என்ரான் நிறுவனம்) செயல்பட்டுக் கொண்டிருப்பதைப்பற்றிக் கேள்வி எழுப்புங்கள். அதைப் பற்றிப்பேச திராணியில்லாதவனே தற்போது அங்கு மக்களின் பிரதிநிதியாய் அப்பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறான். இதற்கு என்ன தகுதி உனக்கு இருக்கிறது என்று கேளுங்கள் உழைக்கும் மக்களே, அப்போது தான் உண்மை வெளியே வரும். அனைத்து உழைக்கும் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அதன் நிர்வாகம் பற்றியெல்லாம் எனக்கெதற்கு, நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், அரசியல் எனக்கு பிடிக்காது, நல்லவர்கள் வரவேண்டும், நம்மவர்கள் வரவேண்டும் இப்படியெல்லாம் பிதற்றித்திரியாமல் சரியான அமைப்பாக மக்கள் ஒன்று திரண்டு போராடாதவரை இது போன்ற கேலிக்கூத்துகளும் தொடரத்தான் செய்யும்.

புதன், ஜனவரி 21, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

இந்த மாநாடு உங்களுக்காகத்தான் வாருங்கள்


"எல்லாம் தனியார் மயம்", போராடி பெற்ற எந்த ஒரு உரிமையும் தொழிலாளிக்கு சொந்த நாட்டிலே கிடையாது, 1958ல் நிறைவேற்றப்பட்ட குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் ஒப்புக்கு அப்படியே உள்ளது, விவசாயம் பசுமைப்புரட்சி என்று உணவு நஞ்சானதும், மண் மலடானதும், விவசாயி தற்கொலையுமே மிச்சம். ஜனநாயகம் பணநாயகமானதை தேர்தலில், சட்டசபையில், பாராளுமன்றத்தில் நிரூபித்தார்கள். ஆதிக்க சாதி மற்றும் அரசுக்கு அடியாளாக உள்நாட்டில் போலீஸும் எல்லையில் இராணுவமும் திறம்பட செயல்பட, சாமியார்களும் தொழிலதிபர்களும் சினிமாக்காரர்களும் கல்லாவை கட்ட, இலக்கிய மொக்கைகள் ஏதேதோ எழுத, சிலர் அதை படித்துவிட்டு ஒரு பக்க வாந்தி எடுக்க இன்னொரு ப‌க்கம் அரசே உருவாக்கும் அடுத்த தலைமுறை குடி மக‌ன்கள்.

சமச்சீர் கல்வி இல்லை, விருப்பமான துறையில் படிக்க வாய்ப்பும் வசதியும் இல்லை, படித்தாலும் வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் நிரந்தரம் இல்லை, எதற்கு இந்த அரசும் சட்டமும் இருக்கிறது, யாருக்காக பயன்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டாமா. பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கை குறைந்தபட்ச உத்தரவாதம் கூட இல்லாமல் இருக்கும் நாட்டில் வர்க்கமாய் திரண்டு போராட எழாமல் புலம்பிக் கிடக்கும் இளைஞர்களே, நண்பர்களே இந்த மாநாடு உங்களுக்காகத்தான் வாருங்கள்.

அமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை காப்பாற்றுவதற்கு எல்லா அரசுகளும் முனைப்புடன் செயல்படுகின்றன. மக்களின் வரிப்பணத்திலிருந்து இந்த நிறுவனங்களை தூக்கி நிறுத்துவதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அள்ளி வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த மோசடி முதலாளித்துவம் கொண்டு வந்த பொருளாதாரச் சரிவில் வாழ்விழந்து, வேலையிழந்து தவிக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறியதும், பெரியதுமாய் சுமார் 1500 தொழிற்சாலைகள் உள்ளன. அமெரிக்க பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்றுமதி சரிந்து, பின்னர் பல இந்திய ஆட்டோமோபைல் நிறுவனங்கள் உற்பத்தியை வெகுவாகக் குறைத்துள்ளன. டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹூண்டாய் முதலான நிறுவனங்கள் ஒரு ஷிப்ட் வீதம் மாதத்திற்கு பதினைந்து நாட்கள் மட்டும் பணி செய்கின்றன. இந்நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் அதிகம் என்பதால் இவர்கள் அனைவரும் தமது மாத வருமானத்தை இழந்து தவிக்கின்றனர். இந்நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரித்து வந்த பல நூறு நிறுவனங்களும் கதவடைப்பு செய்துள்ளன.

அம்பத்தூரில் இருக்கும் இத்தகைய துணை நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலையில்லாமல், வருமானமில்லாமல் தவிக்கின்றனர். முதலாளிகளின் வீழ்ச்சியின் சுமையை இறுதியில் தொழிலாளர்களே சுமக்க வேண்டிய நிலை. மேலும் அம்பத்தூரில் உள்ள ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களிலும் இதுதான் நிலைமை.

சத்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் ஐ.டி துறையிலும் வேலையின்மை என்ற அபயாம் தலைதூக்கியிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க நெருக்கடியை சாக்கிட்டு ஆட்குறைப்பு, செலவினம் குறைப்பு என்ற பெயரில் பலர் நீக்கப்பட்டு வந்த நிலையில் சத்யத்தின் வீழ்ச்சி எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல ஆயிற்று. தமிழகத்தில் ஆண்டுதோறும் படித்து வெளியேறும் 1,20,000 பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் ஐ.டி துறையின் வளமான கனவுடன்தான் இருக்கின்றனர். ஏற்கனவே கேம்பஸ் இன்டர்வியூவில் தெரிவானவர்கள் வேலைக்கு அழைப்பு வராமல் தவிக்கிறார்கள். இதில் இனிமேல் படித்து வெளியேறும் இந்த பொறியியல் மாணவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது.

பிரச்சினைகளுக்கு முடிவில்லை. தீர்வு என்ன?

முன்னெப்போதையும் விட தொழிலாளர்கள், ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் வலுவான தொழிற்சங்கங்களில் அணிதிரள்வதே இந்தப் பிரச்சினைகளுக்கு எதிரான முதல் படியாகும். முதலாளிகளுக்கு என்று கூட்டமைப்புக்களும், அரசுகளும், இன்னும் பல அமைப்புக்களும் இருக்கும்போது தொழிலாளர்களுக்கென்று அதைவிட பலமான அமைப்பு வேண்டுமென்பதை விளக்கத் தேவையில்லை. உலகமயமாக்த்தின் கேடுகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதும், தொழிலாளர்கள் தன்னுணர்வு பெறுவதும் வேறு வேறல்ல. விவசாயிகளின் தற்கொலையும், தொழிலாளர்களின் பணி நீக்கமும் தனித் தனிப் பிரச்சினையல்ல.

இந்தச் சூழ்நிலையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எனும் புரட்சிகரத் தொழிலாளர் அமைப்பு அம்பத்தூரில் வரும் ஜனவரி 25 ஆம் நாள் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு ஒன்றை பிரம்மாண்டமாக நடத்துகிறது. அந்நாள் முழுக்க மேற்கண்ட பிரச்சினைகள் பற்றிய கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்)நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பத்தூர் OT மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

பதிவர்களையும், வாசகர்களையும், ஐ.டி துறை நண்பர்களையும் இந்நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நட்புடன்

கதிர்.

மாநாடு தொடர்புக்கு :

அ. முகுந்தன்: 94448 34519, 94444 42374
பாண்டியன்: 99411 75876


புதன், செப்டம்பர் 10, 2008

சமுதாயம் எங்கே போகிறது...?

பொருளாதார‌ மேம்பாடு என்ற‌ உயர்ந்த‌ நோக்க‌த்தில் ந‌ம் நாட்டு பொருளாதார‌ மேதைக‌ளும், அறிவு ஜீவிக‌ளும் ஏகாதிப‌த்திய‌ கொடுங்கோல‌ன் அமெரிக்காவின் உறுதுணையோடு இற‌க்கும‌தி செய்த தனியார்மயம், தாராளமயம், உல‌க‌ம‌ய‌ம், போன்ற‌ வ‌க்கிர‌கொள்கைக‌ளால் ம‌க்க‌ள் ம‌டிந்துகொண்டிருக்கின்ற‌ன‌ர். ஏற்க‌ன‌வே மாற்றாந்தாய் ம‌ன‌ப்பான்மையோடு கிராம‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும்,அதிகாரிக‌ளும் திட்ட‌மிட்டே இத்திட்டங்களை அமல்படுத்தி இவ‌ற்றை அழிக்க‌ முய‌ற்சியில் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி இர‌வு ப‌க‌லாக‌ செய‌ல்ப‌டுகிற‌ன‌ர். அதனால் வசிக்கத்தகுதியற்ற வெற்று நிலங்களாகிக் கிடக்கின்றன கிராமங்கள்.


வறட்சி, தனிமை, புறக்கணிப்பு இவற்றைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள் நகரத்தின் பகட்டையும் போலித்தனத்தையும் வெறுக்கின்றனர். எனவே, நகரங்களைப்போல அரைவேக்காட்டு உணவை உண்டு அரைவேக்காட்டுத்தனமாய் வாழாமல் வெந்ததைத் தின்று வாழ்க்கையை நடத்துகின்றனர் கிராமங்களில். நகரத்தை மட்டுமே குறிவைக்கும் நவீனமும் நலத்திட்டங்களும் விவசாயத்தையும் அதை நம்பிப் பிழைத்தவர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டன. தொலைக்காட்சியும், செல்போன்களும் கிராமங்களை அடைந்துவிட்டனதான்... அதனாலேயே கிராமங்கள் வளர்ந்துவிட்டதாகவும் தன்னிறைவு பெற்று விட்டதாகவும் நாம் கூற முடியுமா? ஜாதியால் தவிக்கும் மக்கள், சும்மா கிடக்கும் நிலங்கள், இல்லாத மின்சாரம், வராத குடிநீர், செப்பனிடப்படாத சாலைகள், அவசரத்துக்கு உதவாத மருத்துவ மனைகள், தரமற்ற கல்விக் கூடங்கள் என கிராமங்கள் தேய்ந்து சோர்வுற்று அழிந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்தை செழிக்கச் செய்து நாட்டின் பொருளாதாரத்துக்கு துணை நின்ற விவசாயிகள் இன்று என்ன ஆனார்கள். அங்கே வடக்கில் விதர்பா மாவட்டத்தில் எத்தனை ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நெல்லும், கரும்பும், கடலையும், தென்னையும் செழித்த பூமி இன்று பன்னாட்டு நிறுவனங்களின் நில வேட்டையில் குறி பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் முதுகெலும்பு ஒடிந்து நாட்களாயிற்று! சேற்றில் துவண்டு சோறு போடுகின்றவர்களை அரசு புறக்கணித்துவிட்டது. நகர மோகத்தில், விரைகிற வேகத்தில் நாமும் மறந்துவிட்டோம்.

இந்தியா என்பது சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா மட்டுமன்று. அது லட்சக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கியதே. தமிழகம் என்றால் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி, கோவை மட்டுமன்று; ஏறத்தாழ 37,000 கிராமங்களையும் உள்ளடக்கியதே! அடிப்படை மருத்துவ வசதியில்லாத, முதலுதவி, மகப்பேறு மற்றும் தடுப்பூசி போன்ற வசதிகள் மறுக்கப்பட்டவையாகவே இன்றும் இந்திய கிராமப்புறங்கள் உள்ளன. தங்க நாற்கரச் சாலையில் வசதியான இந்தியர்கள் நாட்டைச் சுற்றி வலம் வரும் இந்த நாளில்கூட, நோய் வாய்ப்பட்டால் தூளியில், தோளில் சுமந்து மலை அடிவாரத்திற்கு வந்து சேரும் முன்னரே செத்துப்போகும் மலைவாழ் மக்கள் இங்கே உண்டு. குழந்தை பிறக்காமல் தாயின் வயிற்றிலேயே பிணக்குழி காணும் குழந்தைகள், செத்துப்போன குழந்தையோடு பாடை ஏறும் பெண்கள் இந்த நாட்டின் அவலம்.

எந்த மக்களின் பணத்தில் தாங்கள் படிக்கிறோமா, எங்கு தங்கள் வேர் உள்ளதோ, அந்த மக்களுக்காகப் பணியாற்ற மாணவர்களும் விரும்பவில்லை எனில், அம்மக்களின் நிலை என்னாவது? மருத்துவப் படிப்பிற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செலுத்தும் ஆண்டுக் கட்டணம் வெறும் 4,000 ரூபாய் மட்டுமே. இவர்களைப் பயிற்றுவிக்க ஆகும் பிற செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கிறது. அரசின் பணம் என்ன அரசியல்வாதிகளின் பணமா? அது மக்களின் பணம். நாம் வியர்வை சிந்த உழைத்து கட்டிய வரிப்பணம்! அந்தப் பணத்தில் சுகபோகமாக படித்து முடிக்கிறவர்கள்தான் கிராமப்புற சேவையை மறுக்கிறார்கள். மருத்துவத்தை வியாபாரமாக்கிய கேவலம் இந்தியாவில்தான் மிக மோசமாக நடந்திருக்கிறது. சிறந்த மருத்துவ சேவைக்கு முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கும் கியூபாவைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

150 குடும்பங்களுக்கு ஓர் ஆரம்ப சுகாதார மையம். மருத்துவர் அச்சுகாதார மய்யத்திலேயே தங்கியிருப்பார். அதாவது, மருத்துவரின் வீடும் மருத்துவமனையும் ஒன்றாக அமைந்திருக்கும். இதனால் மக்கள் மருத்துவரை எந்நேரமும் அணுகக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. காலையில் புறநோயாளிகளை கவனித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர், நண்பகலுக்குப் பிறகு வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளிகளை கவனிப்பார். பின்னர் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் முறைகள் குறித்து சொல்லிக் கொடுப்பது, அப்படி இல்லாத சுற்றுப்புறங்களை சீரமைப்பது குறித்து மக்களுடன் ஆலோசனைகள் நடத்துவது என மக்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

இவை அனைத்திற்கும் மேலாக, மருத்துவத்தை ஒரு தொழிலாக செய்வது இங்கு சட்டப்படி குற்றச் செயலாகும். அனைவருக்கும் மருத்துவ சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டில் உள்ள அதிகப்படியான மருத்துவர்களை, உலகில் போரினால் அல்லது இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவ சேவை செய்ய, அரசு தனது சொந்த செலவில் அனுப்பி வைக்கிறது. கியூபாவில் உள்ளது போல் இங்கு மருத்துவத்தை ஒரு தொழிலாகச் செய்வது, சட்டப்படி குற்றமாக்கப்படவில்லை. மருத்துவர்கள் கண்டிப்பாக அரசுப் பணியில்தான் ஈடுபட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படவில்லை. அரசு மருத்துவர்களை கட்டாயப்படுத்தி வெளிநாடுகளுக்குச் சேவை செய்ய அனுப்பவில்லை.

எப்படி இந்தியாவின் உழைப்பாளர்களும், இந்திய மூளைகளும், இந்திய வளங்களும் எடுத்துக் கொள்ள ஆளின்றி சந்தையில் மலிவு விலைக்கு கிடைக்கச் செய்யப்படுவதன் காரணமாகவே குறை கூலி பிரதேசமாக இந்தியா அறியப்பட்டு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாகியுள்ளதோ - அது நியாயப்படுத்தப்படுகிறதோ - அதே போல மருத்துவ பரிசோதனை ஆய்வுக‌ளில் இந்திய‌ நோயாளிக‌ளையே நேர‌டியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். மருந்தையும் மருத்துவத்தையும் எட்டாக்கனியாக்கியதன் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மறுகாலனியாதிக்கம் எதைத்தான் விட்டு வைத்துள்ளது? குர்ரைந்த் கூலிக்கு உழைப்பு சக்தி வேண்டும் என்பதற்க்காக விவசாயம் சாகடிக்கப்பட்டு ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை, குறைந்த கூலிக்கு இந்திய மூளைகள் என்பதற்க்காக தன்மானத்தை அடகுவைத்த தற்குறிகளின் தேசம், கூந்தலை விற்று பிழைக்கின்றனர் ஆந்திர பெண்கள், மானத்தை விற்றும்.., சுமங்கலி திட்டத்தில் நவீன கொத்தடிமைகள் கல்யாண கனவுகளுடன், நாய்கள் சுதந்திரமாக அலைந்து தெருக்களில் குதறி தள்ள குழந்தைகளோ கொத்தடிமைகளாக கட்டுமான கூடங்களில், பிரவச வேதனையையும் கூட அவுட் சோர்ஸ் செய்து இந்திய பெண்களை வாடகைத் தாய்களாக்கி விட்டது…. பாரத மாத கி ஜெய். இதோ நமது நோய்களையும், நோயாளிகளையும் கூட அவுட் சோர்ஸ் செய்துவிட்டனர். இது பிணங்களின் நாடாக மாறினாலும் கூட குறைந்த விலை சுடுகாட்டு கூடமாகவும் இந்தியா அவுட் சோர்ஸ் செய்யப்படும்.

இயற்கைச் சிக்கல்களை தமது மனத்தகவமைப்பின்படி எதிர்கொண்டு வாழ்ந்தாலும் அவர்களுக்கு வேறு சில சிக்கல்கள் இருக்கின்றன. அவை சாதியச் சிக்கல்கள். அந்த மலைவாழ் மக்கள் தமது குடியிருப்பைச் சுற்றியிருக்கும் வயல்களிலும், தோப்புகளிலும் சாதி இந்துக்களுக்கு வேலை செய்யாமல் போனால், வயல்களின் ஊடே போகும் ஒற்றையடிப் பாதையில் நடக்க முடியாது. குடிப்பதற்கு என வயல்களின் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. இந்திய கிராமங்களின் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று. இன்னமும் மாறவில்லை இந்திய கிராமங்கள்!

‘இந்துச் சமூகம் தீண்டத்தகாத மக்களைப் பிரித்து வைப்பதை வலியுறுத்துகிறது. ஓர் இந்து தீண்டத்தகாதவரின் குடியிருப்பிலோ, ஒரு தீண்டத்தகாதவர் இந்துவின் குடியிருப்பிலோ வசிக்க முடியாது. இது, சமூகப் பிரிவினை மட்டுமல்ல, சமூக உறவை தடுப்பதற்கானதொரு தடை. அசுத்தமான மக்களை குகைகளில் வைத்திருப்பது போன்றதொரு வாழ்விட ஒதுக்குமுறை. எல்லா இந்து கிராமங்களும் ஒரு சேரியைக் கொண்டிருக்கின்றன. இந்துக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள் (ஊரில்) தீண்டத்தகாதவர்கள் சேரிகளில் வாழ்கிறார்கள்.' இந்திய கிராமங்களைப் புரிந்துகொள்ள அடிப்படையான பார்வை இதுவன்றி வேறல்ல.

தாக்குதல், அவமானப்படுத்துதல், ஒதுக்கி வைத்தல், கொல்லுதல் என எந்த மனித உரிமை மீறல்களுக்கும் இந்தியாவில் எதிர்ப்புக் குரல்கள் பெரிய அளவில் எழும்புவதில்லை. சாதியப் படிநிலைப்படுத்தப்பட்ட மதவெறியும், குறுங்குழுவாதமும் கொண்ட சமூகம் இந்தியச் சமூகம். இங்கே மனித உரிமை மீறல்களே சமூக நியதிகளாக உள்ளன. எனவேதான் அம்மீறல்கள் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை. பெண்களை ஒடுக்குவது, குழந்தைகளை வதைப்பது, தலித்துகளை கொல்வது அல்லது இழிவுபடுத்துவது என எல்லாமே இந்திய சனாதன சமூகத்தின் எழுதப்படாத சட்டங்கள்.

அதிகாரப்பூர்வமான அரசியல் அமைப்புச் சட்டம் இவைகளை குற்றம் என்றாலும், சட்டத்துக்கு உட்படாத சட்டங்களின்படி இவை குற்றங்களாகக் கருதப்படுவதில்லை. இந்த இழிநிலையுடன் அபாயகரமான ஓர் அம்சம் இணைந்து கொண்டுள்ளது. இந்தச் சட்டமில்லாத சட்டங்களுக்கு அரசும் நிர்வாகமும் துணை நிற்கின்றன. இந்தச் சூழல் மனித உரிமைகளுக்கான மதிப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்தியா முழுக்கவும் நாள்தோறும் நடக்கும் எண்ணற்ற மனித உரிமை மீறல்களில், ஒரு சில மீறல்களே ஊடகங்களில் வெளியாகின்றன. ச‌ந்தேக‌ம் இல்லாம‌ல் இந்த‌ அனைத்து சாதி,மத சிக்கல்களுக்கு பின்ன‌னியில் இருப்ப‌து இந்துவெறிய‌ர்களான‌ BJP, VHP, RSS போன்றவ‌ர்க‌ளே....

நேற்றைய‌ நாளித‌ழில் இலை.க‌ணேச‌ன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாக செலவுக்கு நிதி தாருங்கள் என்று அறிக்கை வந்தது. ஏற்க‌ன‌வே ம‌னித‌ச‌மூக‌ம் ம‌ற‌க்க‌ முடியாத‌ அள‌விற்கு கொடுமைக‌ளை அர‌ங்கேற்றியுள்ள‌ இந்த‌ துரோகிக‌ள் ம‌றுப‌டியும் எவ்வள‌வு கொழுப்பிருந்தால் ம‌க்க‌ளிட‌மே பிச்சை கேட்டு கொள்ளையடிக்க‌ அறிக்கை விட்டிருப்பார்க‌ள்.

ம‌ற‌ந்து விட‌ வேண்டாம் ந‌ண்ப‌ர்க‌ளே....
அயோத்தி,குஜராத் கலவரம் முதல் அமர்நாத் கலவரம் வரை கண்முன்னே எண்ணிலடங்கா உயிர்களை காவு வாங்கிய கொலைவெறியர்களின் கறுப்பு வரலாறு.

110 கோடி மக்களில் 80 விழுக்காடு மக்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவென அரசின் குறிப்பு சொல்கிறது. உலகத்துக்கே சோறுபோட்ட விவசாயிக்கு சோறு இல்லையென கைவிரிக்கும் கைய்யாலாகாத அரசு, பொறுப்புகளை கைகழுவும் பொறுப்பில்லாத அரசு, டாஸ்மார்க் மட்டுமே நிர்வாகம் பன்னதெரிந்த அரசு, சமீப காலத்தில் பொருளாதாரத்திலும் விவசாயத்திலும் தன்னிறைவு பெற்றதாக கூறும் தன்மானமில்லாத இந்த அடிமைவல்லரசு கடந்த 10 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளை ஈவிரக்கமின்றி திட்டமிட்டே கொலைசெய்துள்ளது. 15கோடி ஹெக்டேர் நிலம், வருடத்தில் 220 நாள் சூரியஒளி, 880 மி.மீ மழை,மிகப்பெரிய மனிதவளம் இருந்தும் அரசியல் ரீதியில் சரியான கொள்கையும் மன உறுதியும் இல்லாததால் பசி, பஞ்சம், விலைவாசி உயர்வு, பணவிக்கம்.............எல்லாம்.

தியாகமும் துரோகமும் கலந்தது கடந்த வரலாறு மட்டுமல்ல, நிகழும் வரலாறிலும் தான். எல்லா வேலைகளையும் பிரித்து சாதி உருவாக்கிய பார்ப்பணத்திமிர், உழைக்கும் மக்கள் பொருளாதார சுழலில் சிக்கியும், துரோகத்தின் சந்ததிகளென‌ இன்றும் ஊரை ஏய்க்கும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பண்ணையார்களும், பணக்காரர்களும் பெருமைப்படுத்தவும் சுக வாழ்வும் வாழும் இழி நிலையை நம் கண் முன்னே கண்டபிறகும் போராடத்தயங்கும் மக்களின் விடியல் சினிமாவில் வருவதை போல வெறும் இரண்டு மணி நேரத்தில் உங்களின் எல்லாப் பிரச்சனைகளையும் தனி ஒரு ஆளாகத் தீர்த்து வைப்பவராக வேறு எவராவது வருவாரென போலி முகங்களை நம்பிக்கொண்டிருக்காதீர்கள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2008

நன்றி மறந்த நாடு

தாய்நாட்டு விடுதலைக்காக தன்னலம் பாராத தேசபக்தனாக தமிழ் கூறும் நல்லோரில் நம‌க்கு சட்டென நினைவுக்கு வருபவர்களில் வ.உ.சி, மருது, கட்டபொம்மன் குறிப்பிடத் தகுந்தவர்கள். அவர்கள் எந்த அளவிற்கு தாய்மண்ணை நேசித்தார்களோ அந்த அளவிற்கு நாடு அவர்களை நினைவு கொள்கிறதா என்பதற்கு வெட்கித்தலைகுனிய வேண்டிய நிலையில் தான் நம் விடை உள்ளதெனும் நிதர்சனமே நாம் கீழ்க்காணும் காட்சி.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம் ஏகாதிபத்திய எதிர்ப்பில் கப்பலோட்டியது மட்டுமில்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங் கோன்மையையும் எதிர்த்து மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வையில் ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே வ.உ.சி. தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். போராட்டமே வாழ்க்கையாக தாய் நாட்டுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, தன்னிகரில்லாத தலைவனாக திருநெல்வேலி சீமையிலே வாழ்ந்த அந்த செக்கிழுத்த செம்மலுக்கு நாம் செய்த கைமாறு என்ன? வாழ்வதற்கு வழி இல்லாமல் நிராதராவாய் மதுரை மூன்றுமாவடி சாலையோரம் தங்கி வாழும் செக்கிழுத்த செம்மலின் கொள்ளுப்பேரனும் பேத்தியும்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இந்த அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்படும் தியாகத்தின் சந்ததிகள் தங்கள் அடையாளம் இழந்து ஒரு நடைபிணமாய் இருப்பதைக்கண்டு கல் நெஞ்சும் உருகும். ஆனால் ஆட்சியாளர்களும் அரசியல் வியாதிகளும் எதைப்ப‌ற்றி அக்கறை கொண்டார்கள். கவர்ச்சியான வார்த்தைகளால் மக்களுக்கு போதையூட்டி அவர்களை மழுங்கடித்ததைத் தவிர வேறு என்ன செய்தார்கள். அதிகார வெறியும் பதவி போதையும் அவர்களின் காதை செவிடாக்கி கண்ணை குருடாக்கி விட்டது. உற்றார் உறவினரும், கட்டிய சொந்தங்களும் கைவிட்ட நிலையினிலே கடைசியில் ஒட்டியிருந்த துளி நம்பிக்கைக்காக அரசை நாடி நடையாய் நடந்து வெறுத்து இதுதான் தலைவிதி என்ற நிற்கதிக்கு தள்ளப்பட்டனர்.



மறுகாலனி ஆதிக்கத்தை தலைமேல் தாங்கிகொண்டிருக்கும் தரம் தாழ்ந்த அரசானது ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் சாதகமாக மட்டுமே சட்டம் இயற்றவும், மூளையை கசக்கி வேலை செய்யவும் முனைகிறது. உண்மையான தியாகிகளுக்கு என்ன செய்ததென பார்த்தால் ஒன்றும் இல்லை. அரசியல் லாபத்திற்காக, வியாபார நோக்கத்திற்காக மட்டுமே அதிகபட்சமாய் சிலை வடிப்பதும் அஞ்சல் தலை வெளியிடுவதோடும் தன் கடனை முடித்துக்கொள்கிறது. மறுபடியும் மறுபடியும் இதையே பெருமை பேசுகிறது.

வரலாறுகளை இருட்டடிப்பு செய்து தியாகத்தின் வாரிசுகளை உதாசினப்படுத்தி நன்றி மறந்த நாடாய் இருப்பதினாலேயே ம‌னிதம் மறந்த இயந்திர மனிதன் உணர்வும் மரத்து சுரனையற்று வாழ்வதால் மறுகாலணி ஆதிக்கமும், ஏகாதிபத்திய கொடுமையும், எதிர்காலச் சிந்தனையும் இல்லாமல் சுயநலமே உருவாய் அடிமை வாழ்வை நோக்கி அடிவைத்துச் செல்வ‌துட‌ன் தன் ம‌ண்ணுக்குறிய‌ மாண்பு அறியாமல் போர்க்குண‌மும் இல்லாம‌ல் ம‌க்கி ம‌ல‌டானான்.

அறிவியல் வளர்கிறது பொருளாதாரம் பெருகுகிறது என்றெல்லாம் பொய் வத‌ந்திகளை பரப்பிவரும் ஓட்டுப்பொறுக்கி அரசியலை இனியாவது உண‌ர்ந்தறிய வேண்டும் நண்பர்களே, இவர்கள் நன்மை செய்வார்கள் என்று இனியும் நம்பினால் நம்மைத்தவிர முட்டாள் உலகில் வேறு யாரும் இல்லை. முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் தான் இந்த அறிவு வள‌ர்ச்சியால், தொழிற்புரட்சியால் வளர்ச்சியடைந்துள்ளன. அவைகளுக்கு சாதகமான சூழலே இங்கு ஏற்படுத்தி கொடுத்திருப்பது இந்த அரசியல் என்பதை அறிய வேண்டும். கூட்டணி விபச்சாரத்தில் கைகோர்ப்பவர்கள் கொள்கையை சீட்டு அடிப்படையில் அடகு வைப்பவர்கள், கூட்டு உடைந்ததும் அவர்களுக்குள்ளே காறி உமிழ்ந்த காட்சியெல்லாம் நீங்கள் கண்ணெதிரே கண்டதுதான். மௌனம் வேண்டாம் நண்பர்களே.... மரணித்துக்கொண்டிருப்பது நாம் மட்டுமல்ல, நாடும் தான்.

தியாகமறிந்த வாரிசுகளே மூன்று தலைமுறை இடைவெளியில் இந்நிலைக்கு ஆளானால் தியாகம் மறந்த நம் நிலை என்ன? சிந்தியுங்கள்.