புதன், செப்டம்பர் 10, 2008

சமுதாயம் எங்கே போகிறது...?

பொருளாதார‌ மேம்பாடு என்ற‌ உயர்ந்த‌ நோக்க‌த்தில் ந‌ம் நாட்டு பொருளாதார‌ மேதைக‌ளும், அறிவு ஜீவிக‌ளும் ஏகாதிப‌த்திய‌ கொடுங்கோல‌ன் அமெரிக்காவின் உறுதுணையோடு இற‌க்கும‌தி செய்த தனியார்மயம், தாராளமயம், உல‌க‌ம‌ய‌ம், போன்ற‌ வ‌க்கிர‌கொள்கைக‌ளால் ம‌க்க‌ள் ம‌டிந்துகொண்டிருக்கின்ற‌ன‌ர். ஏற்க‌ன‌வே மாற்றாந்தாய் ம‌ன‌ப்பான்மையோடு கிராம‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும்,அதிகாரிக‌ளும் திட்ட‌மிட்டே இத்திட்டங்களை அமல்படுத்தி இவ‌ற்றை அழிக்க‌ முய‌ற்சியில் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி இர‌வு ப‌க‌லாக‌ செய‌ல்ப‌டுகிற‌ன‌ர். அதனால் வசிக்கத்தகுதியற்ற வெற்று நிலங்களாகிக் கிடக்கின்றன கிராமங்கள்.


வறட்சி, தனிமை, புறக்கணிப்பு இவற்றைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள் நகரத்தின் பகட்டையும் போலித்தனத்தையும் வெறுக்கின்றனர். எனவே, நகரங்களைப்போல அரைவேக்காட்டு உணவை உண்டு அரைவேக்காட்டுத்தனமாய் வாழாமல் வெந்ததைத் தின்று வாழ்க்கையை நடத்துகின்றனர் கிராமங்களில். நகரத்தை மட்டுமே குறிவைக்கும் நவீனமும் நலத்திட்டங்களும் விவசாயத்தையும் அதை நம்பிப் பிழைத்தவர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டன. தொலைக்காட்சியும், செல்போன்களும் கிராமங்களை அடைந்துவிட்டனதான்... அதனாலேயே கிராமங்கள் வளர்ந்துவிட்டதாகவும் தன்னிறைவு பெற்று விட்டதாகவும் நாம் கூற முடியுமா? ஜாதியால் தவிக்கும் மக்கள், சும்மா கிடக்கும் நிலங்கள், இல்லாத மின்சாரம், வராத குடிநீர், செப்பனிடப்படாத சாலைகள், அவசரத்துக்கு உதவாத மருத்துவ மனைகள், தரமற்ற கல்விக் கூடங்கள் என கிராமங்கள் தேய்ந்து சோர்வுற்று அழிந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்தை செழிக்கச் செய்து நாட்டின் பொருளாதாரத்துக்கு துணை நின்ற விவசாயிகள் இன்று என்ன ஆனார்கள். அங்கே வடக்கில் விதர்பா மாவட்டத்தில் எத்தனை ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நெல்லும், கரும்பும், கடலையும், தென்னையும் செழித்த பூமி இன்று பன்னாட்டு நிறுவனங்களின் நில வேட்டையில் குறி பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் முதுகெலும்பு ஒடிந்து நாட்களாயிற்று! சேற்றில் துவண்டு சோறு போடுகின்றவர்களை அரசு புறக்கணித்துவிட்டது. நகர மோகத்தில், விரைகிற வேகத்தில் நாமும் மறந்துவிட்டோம்.

இந்தியா என்பது சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா மட்டுமன்று. அது லட்சக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கியதே. தமிழகம் என்றால் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி, கோவை மட்டுமன்று; ஏறத்தாழ 37,000 கிராமங்களையும் உள்ளடக்கியதே! அடிப்படை மருத்துவ வசதியில்லாத, முதலுதவி, மகப்பேறு மற்றும் தடுப்பூசி போன்ற வசதிகள் மறுக்கப்பட்டவையாகவே இன்றும் இந்திய கிராமப்புறங்கள் உள்ளன. தங்க நாற்கரச் சாலையில் வசதியான இந்தியர்கள் நாட்டைச் சுற்றி வலம் வரும் இந்த நாளில்கூட, நோய் வாய்ப்பட்டால் தூளியில், தோளில் சுமந்து மலை அடிவாரத்திற்கு வந்து சேரும் முன்னரே செத்துப்போகும் மலைவாழ் மக்கள் இங்கே உண்டு. குழந்தை பிறக்காமல் தாயின் வயிற்றிலேயே பிணக்குழி காணும் குழந்தைகள், செத்துப்போன குழந்தையோடு பாடை ஏறும் பெண்கள் இந்த நாட்டின் அவலம்.

எந்த மக்களின் பணத்தில் தாங்கள் படிக்கிறோமா, எங்கு தங்கள் வேர் உள்ளதோ, அந்த மக்களுக்காகப் பணியாற்ற மாணவர்களும் விரும்பவில்லை எனில், அம்மக்களின் நிலை என்னாவது? மருத்துவப் படிப்பிற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செலுத்தும் ஆண்டுக் கட்டணம் வெறும் 4,000 ரூபாய் மட்டுமே. இவர்களைப் பயிற்றுவிக்க ஆகும் பிற செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கிறது. அரசின் பணம் என்ன அரசியல்வாதிகளின் பணமா? அது மக்களின் பணம். நாம் வியர்வை சிந்த உழைத்து கட்டிய வரிப்பணம்! அந்தப் பணத்தில் சுகபோகமாக படித்து முடிக்கிறவர்கள்தான் கிராமப்புற சேவையை மறுக்கிறார்கள். மருத்துவத்தை வியாபாரமாக்கிய கேவலம் இந்தியாவில்தான் மிக மோசமாக நடந்திருக்கிறது. சிறந்த மருத்துவ சேவைக்கு முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கும் கியூபாவைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

150 குடும்பங்களுக்கு ஓர் ஆரம்ப சுகாதார மையம். மருத்துவர் அச்சுகாதார மய்யத்திலேயே தங்கியிருப்பார். அதாவது, மருத்துவரின் வீடும் மருத்துவமனையும் ஒன்றாக அமைந்திருக்கும். இதனால் மக்கள் மருத்துவரை எந்நேரமும் அணுகக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. காலையில் புறநோயாளிகளை கவனித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர், நண்பகலுக்குப் பிறகு வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளிகளை கவனிப்பார். பின்னர் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் முறைகள் குறித்து சொல்லிக் கொடுப்பது, அப்படி இல்லாத சுற்றுப்புறங்களை சீரமைப்பது குறித்து மக்களுடன் ஆலோசனைகள் நடத்துவது என மக்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

இவை அனைத்திற்கும் மேலாக, மருத்துவத்தை ஒரு தொழிலாக செய்வது இங்கு சட்டப்படி குற்றச் செயலாகும். அனைவருக்கும் மருத்துவ சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டில் உள்ள அதிகப்படியான மருத்துவர்களை, உலகில் போரினால் அல்லது இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவ சேவை செய்ய, அரசு தனது சொந்த செலவில் அனுப்பி வைக்கிறது. கியூபாவில் உள்ளது போல் இங்கு மருத்துவத்தை ஒரு தொழிலாகச் செய்வது, சட்டப்படி குற்றமாக்கப்படவில்லை. மருத்துவர்கள் கண்டிப்பாக அரசுப் பணியில்தான் ஈடுபட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படவில்லை. அரசு மருத்துவர்களை கட்டாயப்படுத்தி வெளிநாடுகளுக்குச் சேவை செய்ய அனுப்பவில்லை.

எப்படி இந்தியாவின் உழைப்பாளர்களும், இந்திய மூளைகளும், இந்திய வளங்களும் எடுத்துக் கொள்ள ஆளின்றி சந்தையில் மலிவு விலைக்கு கிடைக்கச் செய்யப்படுவதன் காரணமாகவே குறை கூலி பிரதேசமாக இந்தியா அறியப்பட்டு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாகியுள்ளதோ - அது நியாயப்படுத்தப்படுகிறதோ - அதே போல மருத்துவ பரிசோதனை ஆய்வுக‌ளில் இந்திய‌ நோயாளிக‌ளையே நேர‌டியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். மருந்தையும் மருத்துவத்தையும் எட்டாக்கனியாக்கியதன் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மறுகாலனியாதிக்கம் எதைத்தான் விட்டு வைத்துள்ளது? குர்ரைந்த் கூலிக்கு உழைப்பு சக்தி வேண்டும் என்பதற்க்காக விவசாயம் சாகடிக்கப்பட்டு ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை, குறைந்த கூலிக்கு இந்திய மூளைகள் என்பதற்க்காக தன்மானத்தை அடகுவைத்த தற்குறிகளின் தேசம், கூந்தலை விற்று பிழைக்கின்றனர் ஆந்திர பெண்கள், மானத்தை விற்றும்.., சுமங்கலி திட்டத்தில் நவீன கொத்தடிமைகள் கல்யாண கனவுகளுடன், நாய்கள் சுதந்திரமாக அலைந்து தெருக்களில் குதறி தள்ள குழந்தைகளோ கொத்தடிமைகளாக கட்டுமான கூடங்களில், பிரவச வேதனையையும் கூட அவுட் சோர்ஸ் செய்து இந்திய பெண்களை வாடகைத் தாய்களாக்கி விட்டது…. பாரத மாத கி ஜெய். இதோ நமது நோய்களையும், நோயாளிகளையும் கூட அவுட் சோர்ஸ் செய்துவிட்டனர். இது பிணங்களின் நாடாக மாறினாலும் கூட குறைந்த விலை சுடுகாட்டு கூடமாகவும் இந்தியா அவுட் சோர்ஸ் செய்யப்படும்.

இயற்கைச் சிக்கல்களை தமது மனத்தகவமைப்பின்படி எதிர்கொண்டு வாழ்ந்தாலும் அவர்களுக்கு வேறு சில சிக்கல்கள் இருக்கின்றன. அவை சாதியச் சிக்கல்கள். அந்த மலைவாழ் மக்கள் தமது குடியிருப்பைச் சுற்றியிருக்கும் வயல்களிலும், தோப்புகளிலும் சாதி இந்துக்களுக்கு வேலை செய்யாமல் போனால், வயல்களின் ஊடே போகும் ஒற்றையடிப் பாதையில் நடக்க முடியாது. குடிப்பதற்கு என வயல்களின் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. இந்திய கிராமங்களின் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று. இன்னமும் மாறவில்லை இந்திய கிராமங்கள்!

‘இந்துச் சமூகம் தீண்டத்தகாத மக்களைப் பிரித்து வைப்பதை வலியுறுத்துகிறது. ஓர் இந்து தீண்டத்தகாதவரின் குடியிருப்பிலோ, ஒரு தீண்டத்தகாதவர் இந்துவின் குடியிருப்பிலோ வசிக்க முடியாது. இது, சமூகப் பிரிவினை மட்டுமல்ல, சமூக உறவை தடுப்பதற்கானதொரு தடை. அசுத்தமான மக்களை குகைகளில் வைத்திருப்பது போன்றதொரு வாழ்விட ஒதுக்குமுறை. எல்லா இந்து கிராமங்களும் ஒரு சேரியைக் கொண்டிருக்கின்றன. இந்துக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள் (ஊரில்) தீண்டத்தகாதவர்கள் சேரிகளில் வாழ்கிறார்கள்.' இந்திய கிராமங்களைப் புரிந்துகொள்ள அடிப்படையான பார்வை இதுவன்றி வேறல்ல.

தாக்குதல், அவமானப்படுத்துதல், ஒதுக்கி வைத்தல், கொல்லுதல் என எந்த மனித உரிமை மீறல்களுக்கும் இந்தியாவில் எதிர்ப்புக் குரல்கள் பெரிய அளவில் எழும்புவதில்லை. சாதியப் படிநிலைப்படுத்தப்பட்ட மதவெறியும், குறுங்குழுவாதமும் கொண்ட சமூகம் இந்தியச் சமூகம். இங்கே மனித உரிமை மீறல்களே சமூக நியதிகளாக உள்ளன. எனவேதான் அம்மீறல்கள் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை. பெண்களை ஒடுக்குவது, குழந்தைகளை வதைப்பது, தலித்துகளை கொல்வது அல்லது இழிவுபடுத்துவது என எல்லாமே இந்திய சனாதன சமூகத்தின் எழுதப்படாத சட்டங்கள்.

அதிகாரப்பூர்வமான அரசியல் அமைப்புச் சட்டம் இவைகளை குற்றம் என்றாலும், சட்டத்துக்கு உட்படாத சட்டங்களின்படி இவை குற்றங்களாகக் கருதப்படுவதில்லை. இந்த இழிநிலையுடன் அபாயகரமான ஓர் அம்சம் இணைந்து கொண்டுள்ளது. இந்தச் சட்டமில்லாத சட்டங்களுக்கு அரசும் நிர்வாகமும் துணை நிற்கின்றன. இந்தச் சூழல் மனித உரிமைகளுக்கான மதிப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்தியா முழுக்கவும் நாள்தோறும் நடக்கும் எண்ணற்ற மனித உரிமை மீறல்களில், ஒரு சில மீறல்களே ஊடகங்களில் வெளியாகின்றன. ச‌ந்தேக‌ம் இல்லாம‌ல் இந்த‌ அனைத்து சாதி,மத சிக்கல்களுக்கு பின்ன‌னியில் இருப்ப‌து இந்துவெறிய‌ர்களான‌ BJP, VHP, RSS போன்றவ‌ர்க‌ளே....

நேற்றைய‌ நாளித‌ழில் இலை.க‌ணேச‌ன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாக செலவுக்கு நிதி தாருங்கள் என்று அறிக்கை வந்தது. ஏற்க‌ன‌வே ம‌னித‌ச‌மூக‌ம் ம‌ற‌க்க‌ முடியாத‌ அள‌விற்கு கொடுமைக‌ளை அர‌ங்கேற்றியுள்ள‌ இந்த‌ துரோகிக‌ள் ம‌றுப‌டியும் எவ்வள‌வு கொழுப்பிருந்தால் ம‌க்க‌ளிட‌மே பிச்சை கேட்டு கொள்ளையடிக்க‌ அறிக்கை விட்டிருப்பார்க‌ள்.

ம‌ற‌ந்து விட‌ வேண்டாம் ந‌ண்ப‌ர்க‌ளே....
அயோத்தி,குஜராத் கலவரம் முதல் அமர்நாத் கலவரம் வரை கண்முன்னே எண்ணிலடங்கா உயிர்களை காவு வாங்கிய கொலைவெறியர்களின் கறுப்பு வரலாறு.

110 கோடி மக்களில் 80 விழுக்காடு மக்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவென அரசின் குறிப்பு சொல்கிறது. உலகத்துக்கே சோறுபோட்ட விவசாயிக்கு சோறு இல்லையென கைவிரிக்கும் கைய்யாலாகாத அரசு, பொறுப்புகளை கைகழுவும் பொறுப்பில்லாத அரசு, டாஸ்மார்க் மட்டுமே நிர்வாகம் பன்னதெரிந்த அரசு, சமீப காலத்தில் பொருளாதாரத்திலும் விவசாயத்திலும் தன்னிறைவு பெற்றதாக கூறும் தன்மானமில்லாத இந்த அடிமைவல்லரசு கடந்த 10 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளை ஈவிரக்கமின்றி திட்டமிட்டே கொலைசெய்துள்ளது. 15கோடி ஹெக்டேர் நிலம், வருடத்தில் 220 நாள் சூரியஒளி, 880 மி.மீ மழை,மிகப்பெரிய மனிதவளம் இருந்தும் அரசியல் ரீதியில் சரியான கொள்கையும் மன உறுதியும் இல்லாததால் பசி, பஞ்சம், விலைவாசி உயர்வு, பணவிக்கம்.............எல்லாம்.

தியாகமும் துரோகமும் கலந்தது கடந்த வரலாறு மட்டுமல்ல, நிகழும் வரலாறிலும் தான். எல்லா வேலைகளையும் பிரித்து சாதி உருவாக்கிய பார்ப்பணத்திமிர், உழைக்கும் மக்கள் பொருளாதார சுழலில் சிக்கியும், துரோகத்தின் சந்ததிகளென‌ இன்றும் ஊரை ஏய்க்கும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பண்ணையார்களும், பணக்காரர்களும் பெருமைப்படுத்தவும் சுக வாழ்வும் வாழும் இழி நிலையை நம் கண் முன்னே கண்டபிறகும் போராடத்தயங்கும் மக்களின் விடியல் சினிமாவில் வருவதை போல வெறும் இரண்டு மணி நேரத்தில் உங்களின் எல்லாப் பிரச்சனைகளையும் தனி ஒரு ஆளாகத் தீர்த்து வைப்பவராக வேறு எவராவது வருவாரென போலி முகங்களை நம்பிக்கொண்டிருக்காதீர்கள்.