அப்படிப்பட்ட நாளொன்று சமீபத்தில் போனது, அதுதான் ஆகஸ்டு 15. அதற்காக மேன்மை தாங்கிய மக்கள் தலைவர்களென தங்களை உருவகப்படுத்தும் ஓட்டுபொறுக்கிகள் சிலவற்றின் வாழ்த்துச்செய்திகள்....
- பெற்ற சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்று பட்டுப் பாடுபட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது இந்த சுதந்திரத் திருநாள். - DMK
- 35 கோடி மக்களோடு சுதந்திரம் கண்ட நாம் இன்று 100 கோடிக்கு மேலாக உயர்ந்து உலகரங்கிலும் புகழோடு வளர்ந்து வருவதை நினைவு கூறும் இனிய சுதந்திர நாள் இது.- INC
- 60 ஆண்டுகள் ஆன பிறகு இன்றுள்ள நிலை கவலைக்குரியது. ஒருபுறத்தில் பயங்கரவாதம். மறுபுறத்தில் அன்னிய மோகம், அரசே அடிமை சாசனத்தில் கையெழுத்திட அதீத ஆர்வம் காட்டும் நிலை, மீண்டும் ஒரு பிரிவினை ஏற்படுமோ என்கின்ற சூழ்நிலை. இவைகளை எதிர் கொண்டு சமாளிக்க, வெற்றி பெற்று பெற்ற சுதந்திரத்தை பேணிகாக்க சபதம் ஏற்போம்.- BJP
- இந்தியா சுதந்திரம் பெற்று இன்று 62-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எல்லோரும் சமம் என்ற ஜனநாயகத்தை அரசியலில் காப்பாற்றி வருகிறோம் என்பது பெருமைக்குரியது.-DMDK
- அரசியல் சுயநலத்தை மறந்து, ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து, ஒருங்கிணைந்து உழைத்து செயல்பட்டு நமது தேசத்தை வல்லரசாக மாற்றும் வகையிலும் பாடுபட வேண்டும்'-AISMK
- நாட்டு மக்களின் எதிர்கால நல்வாழ்விற்காக நாங்கள் மென்மேலும் கடுமையாக உழைப்போம் என்பதே சுதந்திரம் பெற்றதன் கடமையாகும். -PMK
நாம் சுதந்திரம் பெற்றுவிட்டொம் என்பது ஒரு ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய், ஆனாலும் பெற்றுவிட்டதாய் நம்பும் பல அறிவு ஜீவிகளுக்கு கேள்வியாகவும், அவல ஜீவன்களுக்கு ஒரு விடையாகவும் இந்த உரையை வைக்கிறேன்.
மேற்கண்ட வாழ்த்துச்செய்தியில் மக்களின் தலைவர்களென தங்களை சொல்லிக்கொள்பவர்கள், மக்களை சாதி, மத, இன, மொழிப் பாகுபாடின்றி வாழச் சொல்லி ஒப்புக்கு வாழ்த்துபவர்கள் யார்? அதே சாதி, மத, மொழி, இனத் தலைவர்கள் தான். ஊருக்குத்தான் அறிவுரை என்பதுபோல கூட்டணி விபசாரத்தின் போது கொள்கையை அடகு வைப்பவர்கள் மக்களுக்காக சிந்தனை செய்யாமல், செயல்படாமல், ஒன்று சேராதவர்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும்
அன்றாட வாழ்வின் அவலநிலையும் இன்றைய, எதிர்கால சமுதாயத்தைப்பற்றியும், மக்களின் துயரங்கள் என்னவென்றே அறியாத மூடர்களும் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றனர். அதாவது சிறுவயதில் சைக்கிள் ஓட்ட எல்லோருக்கும் ஆசை, அதன் பிறகு யாரையாவது பின்னே அமரவைத்து ஓட்டிச்செல்ல ஆசை. ஓட்டுபவனுக்கு உற்சாகமாகத்தான் இருக்கும், அமர்ந்துகொண்டிருப்பவர்க்கும் சாலையில் செல்பவருக்கும் தான் தெரியும் அது எவ்வளவு கொடுமை என்று. அது போலத்தான் இருக்கிறது இவர்களின் துடிப்பு.
முரண்பாடுகளே முகங்களாய் வாழும் சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமையில்லா அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கங்களும் இங்கே நடத்திக்கொண்டிருக்கும் இரட்டை ஆட்சி முறையில் மக்களின் முன்னேற்றம் கீழ்க்காணும் இந்த அவலம் தான்.....
- துரோகிகளாலும், எதிரிகளாலும் உறிஞ்சப்பட்ட சாமான்ய மக்களின் அன்றாட வாழ்வே பெரும் போராட்டமாய் இருக்கும் வேளையில் உண்மைகளை மறைத்து (மறந்து) விட்ட காரணத்தினால் நம் போராடும் உணர்வும் மழுங்கடிக்கப்படுகிறது.
- கலாச்சாரம் கைமாறிக்கொண்டு இருப்பதால் ஏகாதிபத்தியத்தின் வெகுமதியாய் எல்லாவற்றிற்க்கும் ஒரு நாளை ஒதுக்கிவிட்டோம், அந்நாளில் மட்டும் அரைகுறையாய் நினைவுபடுத்திக்கொண்டு பிறகு அப்படியே விட்டுவிடுகிறோம்.
- ஆடை இல்லாதவன் அரைமனிதன் என்பார்கள், உண்மையில் வரலாறு அறியாதவன் அரை மனிதன். சாதியையும், சினிமா கழிசடைகளையும், இரத்தத்தில் கலந்துகொள்பவர்கள் மூடர்களாய் இச்சமுதாயத்தில் முளைத்து வருகின்றனர்.
- போலிஅரசியல், ஆன்மீகம், ஆடம்பரம், கிரிக்கெட், சுயநலம், சினிமா கழிசடைகள் போன்ற போதைகளில் மூழ்கித்திளைக்கும் இளையசமுதாயத்தின் அக்கறையும் நிலையும் கூட கவலைக்கிடம் தான்
புதிய கலாச்சாரம் நவம்பர் 2006ல் வெளிவந்த கட்டுரை இது. அவசியம் கருதி இங்கே பதிக்கிறேன். படிக்கும் அனைவரும் தங்கள் மறுமொழியை பதிவு செய்யவேண்டும், எழுத்தால் மட்டுமல்ல உங்கள் செயலாலும்.
மறுகாலனியாதிக்கம்:தியாகம் கேட்கிறது..........உங்கள் மறுமொழி என்ன?
நிகழ்காலத்தை கூர்ந்து கவனியுங்கள். கடந்த காலம் உங்கள் கண்முன் தெரியும். இதோ, காலனியாக்கத்தின் வரலாறு நம் கண்முன்னே விரிகிறது. இன்று கடன் சுமை தாளாமல் விவசாயிகள் செய்து கொள்ளும் தற்கொலை என்பது அன்று பிரிட்டீஷ் ஆட்சி இந்தியாவுக்கு வழங்கிய 34 பஞ்சங்களின் மறுபதிப்பு.
"வட இந்தியாவின் சமவெளிகள் இந்திய நெசவாளர்களின் எலும்புகளால் வெளுக்கப்படுகின்றன" என்று 1830களின் கோரச்சித்திரத்தை பதிவு செய்தான் பெண்டிங் பிரபு.
இன்று அவர்களுடைய தறிகள் விறகாகி எரிந்து அடங்கியும் விட்டன.
வரிக்கொடுமையால் விவசாயத்தை துறந்து, வயிற்றுப்பாட்டுக்காக ஆங்கில ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்து, தம் சொந்த மக்களை வேட்டையாடும் கூலிப்படையாக மறினார்கள் அன்றைய மக்கள்.
இன்று ஈராக்கில் அமெரிக்கா வழங்கும் கூலிப்படை வேலைவாய்ப்புக்கு கூட்டம் அலை மோதுகிறது.
தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மலேயா, ஃபிஜி என எல்லாத்திசைகளிலும் மக்களை கொத்தடிமைகளாக கப்பலேற்றிய காலனியாதிக்க காலம் மாறிவிட்டது.
இன்று பட்டினியிலிருந்து பிழைக்க கொத்தடிமைகள் வளைகுடாவுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் தாமே விமானமேறிச்செல்கிறார்கள்.
கும்பினிக்காரர்கள் தம் வணிகத்துக்காக விலை கொடுத்து வாங்கிய சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற பகுதிகள் அன்று காலனியாதிக்கத்தின் கொத்தளங்களாகின.
இன்று மறுகாலனியாதிக்கத்தின் தளப்பகுதிகளாக சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அரசே நிறுவிக்கொடுக்கிறது.
அன்று தன் அரண்மணைக்கதவுக்கு வெளியிலுள்ள சாம்ராஜியம் அனைத்தையும் வெள்ளையனுக்கு எழுதிக்கொடுத்த தஞ்சை மன்னன் சரபோஜி, அதற்கு மக்களின் ஒப்புதலை பெறவேண்டிய தேவை இருக்கவில்லை. எனவே தான் அவனை துரோகி என்று எளிதில் அடையாளம் காணமுடிகிறது.
இன்று மறுகாலனியாக்கத்தை மக்களுடைய ஒப்புதலோடு அமல் படுத்த வேண்டியிருப்பதால், துரோகம் என்ற சொல்லை முன்னேற்றம் என்பதாக மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள் சரபோஜியின் வாரிசுகள்.
தன்நலனையே பொது நலனாகக் காட்டும் இந்த வித்தையில் படித்த வர்க்கத்தை நன்றாகவே பயிற்றுவித்திருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம். எனவே தான், பிரிட்டீஷ் ஆட்சி இந்தியாவுக்குச் செய்த நன்மைகளுக்காக லண்டனுக்கு சென்று நன்றி கூறிய மன்மோகன்சிங்கை யாரும் காரி உமிழவில்லை.
"இன்னொரு 200 ஆண்டு காலம் வணிகம் செய்ய வாருங்கள்" என்று ஐரோப்பிய முதலாளிகளை பாக்கு வைத்து அழைத்த ப.சிதம்பரம் துரோகி என்று அடையாளம் காணப்படவுமில்லை.
பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப்பட்டு ஆங்கிலேயருக்கு சேவகம் செய்தவர்களை அன்று 'ஈனப்பிரவிகள்' என்று இகழ்ந்தான் சின்ன மருது. இன்று பன்னாட்டுக்கம்பனிகளின் பதவிகளில் அமர்ந்து பெற்ற மண்ணை விலை பேசும் வித்தகர்களைத்தான் நாட்டின் பெருமையை உயர்த்தும் "ஞானப்பிரவிகள்' என்று கொண்டாடுகிறது ஆளும் வர்க்கம்.
கல்வியறிவும் வரலாற்றறிவும் பெற்றிராத பரிதபத்துக்குறிய 18ம் நூற்றாண்டின் மக்களல்ல நாம். இன்றைய மறுகாலனியாதிக்கம் அன்றைய காலனியாதிக்கத்தின் கோரமான மறுபதிப்பாக இருந்த போதிலும், அதனை ஒப்பிட்டு புரிந்து கொள்வதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் கண்முன்னே குவிந்த போதிலும் நமது வரலாற்றுணர்வு நமத்துக்கிடக்கிறது.
சொரணையின்றி அடிமைத்தனத்தை தெரிவு செய்துகொள்வதில் அவலம் ஏதும் இல்லை. எதிர்த்துப் போராட அஞ்சவும் முடியாத கோழைத்தனம் கையறு நிலையும் இல்லை.
அதோ, தூக்கு மேடையை எதிர்நோக்கி காத்திருக்கிறான் பகத்சிங். தன்னை விடுவிப்பதற்காக ஆங்கிலேய அரசிடம் கருணை மனுப்போட்ட தந்தையை "வேறு யாரும் இதை செய்திருந்தால் துரோகி என்றே நான் கூறியிருப்பேன்" என்று கோபம் தெரிக்க கண்டிக்கிறான்.
மார்பில் குருதி கொப்பளிக்க களத்தில் சரின்து கிடக்கிறான் திப்பு. "மன்னா யாரேனும் ஒரு பிரிட்டீஷ் அதிகாரியிடம் சரணடைந்து உயிர் பிழைத்து விடலாம்" கூறிய தன் பணியாளை "முட்டாள் வாயை மூடு" என்று எச்சரிக்கிறான்.
குண்டடிபட்டு, மகன்கள், பேரன்கள், சக வீரர்கள்..... என நூற்றுக்கணக்கானோருடன் தூக்குக்காக காத்திருக்கிறான் சின்ன மருது. "சமாதானம் பேசலாம்" என ஆசை காட்டுகிறான் துரோகி கௌரி வல்லப உடையத்தேவன். தனது குடிவழியே தூக்கில் தொங்கப்போகும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தும், அந்த துரோகியின் முகத்தில் காரி உமிழ்கிறான் சின்ன மருது.
கைகளை பின்புறம் பிணைத்து கட்டபொம்மனை தூக்குமேடையை நோக்கி இழுத்துச்செல்கிறார்கள் கும்பினிச் சிப்பாய்கள். சுற்றி நிற்கும் பாளையக்காரர்கள் மீது ஏளனமும் வெறுப்பும் கலந்த பார்வையை வீசுகிறான் கட்டபொம்மன். தலை தொங்கிச் சரிந்த பின்னரும் கட்டபொம்மனின் விழிகள் சரியவில்லை.
இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் உறைன்து நிற்கிறது அவனுடைய ஏளனப்பார்வை அந்தப் பார்வைக்கு இலக்காவதற்கு இன்று பாளையக்காரர்கள் எவருமில்லை. நாம் தாம் இருக்கிறோம். கண் கலங்கித் தலை குனிகிறோம்.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 249வது பிறந்த நாள் விழா நடந்தது. ஆனால் அதில் கலந்து கொண்டால் பதவி பறி போகும் என்ற மூட நம்பிக்கையால் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ளவில்லை. முற்போக்கு சிந்தனையாய் தங்களை முன்னிருத்தும் அரசின் அமைச்சர்கள் இப்படியென்றால் இவர்களின் தலைமையும் அப்படித்தானே.
அடுக்குமொழியிலும், அழகு தமிழிலும் மக்களை மயக்கி தமிழே உருவாய் கலைஞர் என கதையளக்கப்படுபவர் அங்கே ஆஸ்திரேலியாவில் ஒரு குட்டி திமிங்கிலம் தாயை பிரிந்து தவிப்பதை தவிப்போடு கவிதையாக்கி அதை மக்களுக்கு சொல்லி தன் மனிதத்தை சொல்லுபவர், இங்கே தமிழன் தன் தாயாம் தமிழ் இல்லாமல் தவிப்பதை ஒரு பொருட்டாய் கொள்ளாமல் போகும் இவர்களின் நீலிக்கண்ணீரை அறியாமல் வியந்து கொண்டிருக்கும் மக்களே!... நீங்கள் கவனமாய் இல்லாத போது உங்களின் ஒரே கோவணமும் களவாடிக் கொள்வாரே.
62வது சுதந்திரத்தை கொண்டாட செல்பவர்கள் தன்னிறைவு அடைந்ததாக ஏதேனும் ஒரு துறையையாவது சொல்ல முடியுமா? மனிதனும் மண்ணும் மலடாகிப்போனது தான் மிச்சம். பள்ளிகள் குறைவு, அதிலும் மாணவர் குறைவு, இருக்கும் மாணவர்க்கும் தமிழ் நாட்டில் தாய்மொழியாம் தமிழுக்கு ஆசிரியர் குறைவு, இதெல்லாம் தமிழே உருவானவர் என்று கதையளப்பவர் ஆட்சியில் நடப்பது, நாம் எங்கிருந்து காணப்போவது நிறைவு. வரலாறுகளை இருட்டடிப்பு செய்வதையும் துரோகிகளின் வாரிசாக மட்டுமே விரும்பும் அரசுகள் இருக்கும் வரை நாடு எந்தத் துறையிலும் தன்னிறைவு பெறாது.
தியாகமும் துரோகமும் கலந்தது கடந்த வரலாறு மட்டுமல்ல, நிகழும் வரலாறிலும் தான். கூடவே அலட்சியமும் சேர்ந்து விட்டது. எல்லா வேலைகளையும் பிரித்து சாதி உருவாக்கிய பார்ப்பணத்திமிர், அதன் பாதிப்பு சாமன்ய மக்களிடமும் தென்படுவதே இங்கு அவலத்தின் உச்சகட்டம். எட்டயபுரம் ராஜா இன்றளவும் அரண்மணையில் வாழ்வதும், கட்டப்பொம்மனின் வாரிசுகள் தொகுப்பு வீடுகள் கேட்டு மனுப்போடுவதும், தியாகத்தின் சந்ததிகள் பெருமைக்கும் வெளிப்படாமல் பொருளாதார சுழலில் சிக்கியும், துரோகத்தின் சந்ததிகள் இன்றும் பெருமைப்படுத்தவும் சுக வாழ்வும் வாழும் இழி நிலையை நம் கண் முன்னே கண்டபிறகும் ஒரு போராடத்தயங்கும் மக்களின் விடியல் சினிமாவில் வருவதை போல வெறும் இரண்டு மணி நேரத்தில் உங்களின் எல்லாப் பிரச்சனைகளையும் தனி ஒரு ஆளாகத் தீர்த்து வைப்பவராக வேறு எவராவது வருவாரென போலி முகங்களை நம்பிக்கொண்டிருக்காதீர்கள்.
எனவே உணர்வீர் நண்பர்களே!
சுதந்திரம் என்பது!
சிறகோடு இருப்பது மட்டுமல்ல..
கூண்டில் அடைபடாமலும் இருப்பதே.
நமக்கான போராட்டம் கையில் எடுக்காமல் நம் சுதந்திரமும் நமக்கில்லை.
1 கருத்து:
vanakkam thozar
revolutionary-movement.blogspot.com
கருத்துரையிடுக